வளசரவாக்கம் மண்டலக்குழு கூட்டம் மக்கள் பிரச்னையை கவனிக்காமல் சிரித்த அதிகாரிகள்: கவுன்சிலர்கள் வேதனை

பூந்தமல்லி: வளசரவாக்கம் மண்டலக் குழு கூட்டத்தில் மக்கள் பிரசச்னைகள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்துக் கொண்டிருதபோது அதிகாரிகள் விளையாட்டாக சிரித்துக் கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலக் குழு கூட்டம் மண்டல அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. மண்டலக்குழு தலைவர் நொளம்பூர் ராஜன் தலைமை வகித்தார். இதில் குடிநீர், சாலை, கால்வாய், கழிவுநீர், குப்பைகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை விரைந்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். மேலும் விரைவில் மழைக்காலம் தொடங்க இருப்பதால் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள், பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அப்போது மாநகராட்சி அதிகாரிகளில் சிலர் மக்கள் பிரச்னைகளை காது கொடுத்துக் கேட்காமல் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். இதனால் மனவருத்தமடைந்த மண்டலக்குழு தலைவர் நொளம்பூர் ராஜன், மக்கள் பிரச்னைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது, அதிகாரிகள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக்கூடாது.  விருப்பம் இல்லாவிட்டால் வெளியே சென்று பேசிவிட்டு வாருங்கள் என்று அதிகாரிகளைக் கண்டித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களுக்கு ஆன்லைன் புகார் என்ற பெயரில் அதிகாரிகள் நோட்டீஸ் கொடுக்கின்றனர். எந்த நோக்கத்தில் புகார் செய்கிறார்கள் என்பதை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். கட்டட உரிமையாளர்களிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகாரிகளே ஆட்களை செட்டப் செய்து புகார் கொடுக்க வைக்கின்றார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. இது குறித்து விசாரி்க்க வேண்டும் என்று 154-வது வார்டு கவுன்சிலர் செல்வக்குமார் பேசினார்.  

இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் பலர் தங்களது பகுதிகளில் உள்ள பல்வேறு குறைகளை தெரிவித்து அவற்றை சரிசெய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது மாமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் எதுவும் சொல்வதில்லை. மக்கள் பிரச்சனைகளைப் பற்றியும், அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை கூறினாலும் அதிகாரிகள்  கவுன்சிலர்களை மதிப்பதே இல்லை என்று பல கவுன்சிலர்கள் இந்தக் கூட்டத்தில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்தக் கூட்டத்தில் ஆலப்பாக்கம் சண்முகம், ஹேமலதா, கிரிதரன், சத்தியநாதன் உள்பட மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: