அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் பதிவு தேனி சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்து அறிக்கையளிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்த தேனி சார்பதிவாளரை, சஸ்பெண்ட் செய்து அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகளை மோசடியாக விற்பனை செய்வதுடன், சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்கின்றனர். உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை பதிவு செய்வதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. உள்ளாட்சி பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. ஆனால், சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் உஷாராணி முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுக்கிறார்.

இந்த அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், ‘‘அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதே? அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டாரா? புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை என்ன செய்தது’’ என்றனர். பின்னர், ‘‘அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது. சம்பந்தப்பட்ட சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை எடுத்து அறிக்கையளிக்க வேண்டும். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு துறை செயலர்களையும் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும்’’ எனக் கூறி விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: