×

வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையில் சம்பவம் போலீஸ் என்று மிரட்டி 100 காதல் ஜோடிகளிடம் வழிப்பறி: பரபரப்பு வாக்குமூலம்

* பிரபல கொள்ளையனை பொறி வைத்து பிடித்தது தனிப்படை
* சின்னத்திரை நடிகைகளுக்கு ரூ.50 லட்சத்தை வாரியிறைத்தார்

சென்னை: சென்னை வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையில் இரவு நேரங்களில் கார் மற்றும் பைக்கில் அமர்ந்து பேசும் காதல் ஜோடிகளிடம், தங்களை போலீஸ் என மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்து வந்த பிரபல வழிப்பறி கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சர்வீஸ் சாலைகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் காதல் ஜோடிகள் கார், பைக்குகளில் அமர்ந்து பேசுவதை பார்க்கலாம். இந்நிலையில் அந்த பகுதிக்கு காக்கி உடையில் வரும் மர்ம நபர்கள், காதல் ஜோடிகளை விசாரணை என்ற பெயரில் மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருவதாக ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு ஆன்லைன் மூலம் தொடர் புகார்கள் வந்தன.

இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் குற்றவாளியை பிடிக்க பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது,  போலீசார் விசாரணையில், தொடர் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் சிவராமன் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திட்டத்தின்படி, காதல் ஜோடி போன்று பெண் காவலர்கள் மற்றும் ஆண் காவலர்கள் என 3 ஜோடிகளை தேர்வு செய்து,  வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் இரவு நேரத்தில் கார் மற்றும் பைக்கில் 3 இடங்களில் காதல் ஜோடி போன்று அமர்ந்து பேச வைத்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 400 அடி வெளிவட்ட சாலையில் போலீசார் காதல் ஜோடி போன்று காருக்குள் பேசிக்கொண்டிருந்த போது, பிரபல கொள்ளையன் சிவராமன் பைக்கில் அங்கு வந்து நின்றார். அப்போது, ‘உங்களை இன்ஸ்பெக்டர் கூப்பிடுகிறார். என்னுடன் வாருங்கள்’ எனக் கூறினார். உடனே காதலர்கள் வேடத்தில் இருந்த காவலர் காரில் இருந்து இறங்கி பேச்சு கொடுத்தபடி கொள்ளையன் சிவராமனை பிடிக்க முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட சிவராமன், தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டியபடி தனது பைக்கில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினார்.

ஆனால், சாதாரண உடையில் பதுங்கி இருந்த உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையிலான தனிப்படையினர் கொள்ளையனை சினிமா பாணியில் பூந்தமல்லி புறவழிச்சாலையில் விரட்டிச்சென்று மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக், 10 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பிடிப்பட்ட சிவராமன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கடலூர் மாவட்டம் விருதாச்சலம் தாலுகா சின்ன காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவன் நான். கடந்த 8 ஆண்டுகளாக செயின் பறிப்பு மற்றும் போலீஸ் என்று கூறி காதல் ஜோடிகளை குறிவைத்து மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்து வந்தேன்.

அந்த வகையில் எனக்கு ஒவ்வொரு நாளும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் கிடைக்கும். கடந்த மாதம் வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் என்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு கடந்த 8ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தேன். ஐடி ஊழியர்கள் மற்றும் பூந்தமல்லி பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்கள் தங்களது காதலியுடன் புறவழிச்சாலை சர்வீஸ் சாலைகளில் நின்று வெகு நேரம் பேசுவதால் அந்த இடத்தை தேர்வு செய்தேன். போலீசாரின் திட்டத்தில் சிக்கினேன்.இதுவரை திருட்டு, செயின் பறிப்பு மற்றும் போலீஸ் என மிரட்டி வழிப்பறி செய்த வகையில் 100க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டுள்ளேன். அதன் மூலம் ரூ.1 கோடிக்கு மேல் கொள்ளையடித்து உள்ளேன்.  

காதல் ஜோடிகள் புகார் அளிக்காததால் இது எனக்கு சாதகமாக இருந்தது. நான் அதிக வழிப்பறியில் ஈடுபட்டுள்ளேன். என்னால் பாதிக்கப்பட்டு புகார் அளித்தவர்கள் வகையில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம்  பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் 45 வழக்குகள் போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால் புகார் அளிக்காமல் சென்ற காதல் ஜோடிகளால் 50க்கும் மேற்பட்ட வழக்கில் இருந்து நான் தப்பித்து வந்துள்ளேன். எனக்கு சிறு வயதில் இருந்து நடிகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் பல லட்சம் செலவு செய்து நட்சத்திர ஓட்டல்களில் ரூம் எடுத்து, பாலியல் புரோக்கர்கள் மூலம் சின்னத்திரை நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பேன்.

நான் இதுவரை முன்னணி சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொப்பாளிகளுக்கு ரூ.40 முதல் ரூ.50 லட்சம் வரை உல்லாசத்திற்காகவே செலவு செய்துள்ளேன். பெரும்பாலான பணத்தை நடிகைகளுக்கு தான் செலவு செய்துள்ளேன். எனக்கு பிடித்த மாதிரி நடக்கும் தொகுப்பாளிகளுக்கு அவர்கள் கேட்கும் பணத்திற்கு மேல் ரூ.10 ஆயிரம் அள்ளி கொடுப்பேன். அதிகளவில் 4 எழுத்து கொண்ட கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 ஆயிரமும், 5 எழுத்து கொண்ட தொகுப்பாளிக்கு ரூ.50 ஆயிரம் என ரூ.1 லட்சம் வரை ஒரு மணி நேரத்திற்கு கொடுத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளேன்.

நான் கருப்பாக இருப்பதால் சிறு வயதில் எந்த பெண்களும் என்னை பார்க்க மாட்டார்கள். ஆனால் பணம் இருந்தால் போதும், அழகு தேவையில்லை என்று சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளிகள் மூலம் நான் தெரிந்து கொண்டேன். நடிகைகளுடன் ஒன்றாக இருப்பதற்காகவே தொடர் வழிப்பறியில் தனி நபராக எந்த கூட்டும் இல்லாமல் செய்து வந்தேன். எனக்கு என்று எந்த பணத்தையும் வைத்திருக்க வில்லை. கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை நடிகைகளுக்காகவே செலவு செய்து வந்தேன். இவ்வாறு சிவராமன் வாக்குமூலம் அளித்ததாக போலீ சார் தெரிவித்தனர்.

* நடிகைகளின் பட்டியலால் வியந்த போலீசார்
கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில், தான் உல்லாசமாக இருந்த சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளிகளின் பட்டியலை கொடுத்துள்ளார். அந்த வகையில் முன்னணி சின்னத்திரை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளிகளின் பெயர் பட்டியலை பார்த்து போலீசாரே வியப்படைந்து உள்ளனர்.

* விசாரணை வளையத்தில் 10 முன்னணி நடிகைகள்
வழிப்பறி கொள்ளையன் சிவராமன் தான் வழிப்பறி செய்த பணத்தில் ரூ.50 லட்சம் வரை நடிகைகளுக்கு மட்டும் செலவு செய்துள்ளான். அதற்கு ஆதாரமாக அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் தன்னுடன் நெருக்கமாக இருந்த 50க்கும் மேற்பட்ட சின்னத்திரை நடிகைகளின் புகைப்படம் சிக்கியுள்ளது. இதனால் அந்த புகைப்படம் மற்றும் சில ஆதாரங்களின்படி 10 முன்னணி நடிகைகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : Vandalur-Meenjoor , Incident on Vandalur-Meenjur 400-feet circular road, 100 couples were robbed by threatening to call the police: Sensational confession
× RELATED காரில் கடத்திய 1 டன் குட்கா பறிமுதல்