நீதியின் தூதுவர்களாக சட்ட மாணவர்கள் திகழ வேண்டும்: அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: நீதியின் தூதுவர்களாக சட்ட மாணவர்கள் திகழ வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அம்பேத்கர் பெயரில், சட்டப் பல்கலைக்கழகம் நிறுவிய முதல் மாநிலம், நம்முடைய தமிழ்நாடுதான். அந்த சிறப்பு நமது தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கக்கூடிய வகையில், அந்த பணியை நிறைவேற்றித் தந்தவர் கலைஞர்தான். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அம்பேத்கரின் பெயரை மரத்வாடா, அதாவது மகாராஷ்டிராவில் இருக்கக்கூடிய மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு வைக்க கலைஞர் அன்றைக்கு முயற்சி மேற்கொண்டார். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கக்கூடிய மக்கள், அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட சிலர் அதை எதிர்த்தார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து தந்திகளை அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சராக இருந்த கலைஞர், அன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். கோடிக்கணக்கான தந்திகள் பறந்தன. 1997ம் ஆண்டு சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியவரும் கலைஞர்தான். அத்தகைய பல்கலைக்கழகத்திற்குத்தான், இன்றைக்கு நாம் வெள்ளிவிழாவை எழுச்சியோடு, ஏற்றத்தோடு கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். இன்னொரு முக்கியமான செய்தியை உங்களிடத்தில் சொல்லியாக வேண்டும்.

இந்த பல்கலைக்கழகத்திற்கு தேவையான இடத்தைத் தேர்வு செய்வது சற்று கடினமாக இருந்தது. இந்நிலையில், முதல்வராக இருக்கக்கூடிய கலைஞருக்கு, வசதியாக இல்லம் இருக்க வேண்டும் என்று, கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூம்பொழில் இல்லத்தில் பல வசதிகளெல்லாம் செய்து கலைஞருக்கு அந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். அந்த காலக்கட்டத்தில்தான் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு இடம் தேடப்பட்டு வந்தது. உடனடியாக பல்கலைக் கழகத்தை அமைக்க வேண்டும் என்ற சூழ்நிலை. அதற்கு உடனடியாக கட்டிடம் கட்டுவது என்றால் காலம் ஆகும், நேரமாகும், காலம் விரயம் ஆகும்.

எனவே, கலைஞர் உடனே ஒரு அறிவிப்பு செய்தார். தான் குடியேற இருந்த, குடியேறுவதற்காக பரிந்துரை செய்யப்பட்ட பூம்பொழில் இல்லத்தை, டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்து, அன்றைக்கு உத்தரவிட்டவர்தான் முதலமைச்சராக இருந்த கலைஞர். தன்னலம் கருதாது பொதுநல நோக்கில் பல்கலைக்கழகம் துவங்கிட, செயல்பட வழிவகை செய்தவர் கலைஞர். 40 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம், தற்போது ஏறக்குறைய 4500 மாணவர்களைக் கொண்டிருக்கிறது. தற்போது 11 முதுநிலைப் பிரிவுகளும் 5 இளங்கலைப் பிரிவுகளும் இருக்கின்றன.

250க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் சட்டம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பினை படித்து வருகிறார்கள். சீர்மிகு சட்டப்பள்ளியில் 70 விழுக்காட்டிற்கு மேல் மாணவிகளே சட்டம் பயின்று வருவதும், பல மாணவிகள் இப்பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் நிர்வாகப் பொறுப்புகளில் துணை நின்று பணியாற்றுவதும் நீதிபதிகளாக நீதி வழங்கி வருவதும் இந்த பல்கலைக்கழகம் பெருமிதம் அடையும் தருணமாக இந்த நாளைப் பார்க்கிறேன்.உங்களது சட்ட அறிவை, வாதத்திறனை, ஏழை எளிய - ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிக் கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளைக் காக்க உங்களது கல்வியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, எண்ணங்களை வெளியிடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, பணிகள் செய்யும் உரிமை, மத சுதந்திரம், கல்வி உரிமை, சொத்துரிமை, பாதிக்கப்பட்டால் அதற்கு தீர்வு காணக்கூடிய உரிமை ஆகிய பல்வேறு உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதனைக் காக்கும் வழக்கறிஞர்களாக நீங்கள் திகழ வேண்டும். சட்டநீதியை மட்டுமல்ல - சமூகநீதியையும் நிலைநாட்டக்கூடியவர்களாக நீங்கள் விளங்க வேண்டும். சட்டத்தின் அரசாக - நீதியின் அரசாக - அதுவும் சமூகநீதியின் அரசாக - ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற சமூகநீதித் தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நாம் நடத்தி வருகிறோம்.

மக்களுக்கு இன்றைய தேவை என்பது நீதி மட்டும்தான். அத்தகைய நீதியின் தூதுவர்களாக சட்டம் படிக்கும் நீங்கள் எதிர்காலத்தில் திகழ வேண்டும். சட்டப்புத்தகங்களையும் தாண்டி, இந்த சமூகத்தையும் பாடமாக நீங்கள் படிக்க வேண்டும். நாட்டின் அரசியல் போராட்டமாக இருந்தாலும் - விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் - சமுதாய சீர்திருத்த இயக்கமாக இருந்தாலும் - அதில் முன்னின்று கடமையாற்றியவர்கள் வழக்கறிஞர்களாகத் தான் இருக்கிறார்கள். இந்தப் படிப்பு என்பதே சட்ட அரசியல் - சமூகவியல் படிப்பாகத்தான் இருக்கிறது. உங்களது கட்சிக்காரர்களுக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறிஞர்களாக மட்டுமில்லாமல் - நீதிக்கு வெற்றி தேடித் தரும் வழக்கறிஞர்களாக நீங்கள் விளங்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில் அமைச்சர் ரகுபதி, உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன், சட்டத்துறை செயலாளர் கார்த்திகேயன், சட்டப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: