×

அனுபவம் இல்லாமல் டாக்டர்கள் அறிவுரைப்படி செவிலியர்கள் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்ததால் குழந்தை பலி: உறவினர்கள் சாலை மறியல்; மதுராந்தகம் அருகே பரபரப்பு

சென்னை: வீடியோ கால் மூலம் செவிலியர்கள் பார்த்த பிரசவத்தால், குழந்தை இறந்து பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி (36), எலக்ட்ரீசியன். இவரது மனைவி புஷ்பா (33). இந்நிலையில் புஷ்பா 2வதாக கர்ப்பமானார். பிரசவ தேதி கடந்த 19ம் தேதி காலை சூனாம்பேடு இல்லிடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அட்மிட் ஆனார். சூனாம்பேடு இல்லிடு பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புஷ்பாவும் அவரது பெற்றோரும் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில் செவிலியர்கள் மூன்று பேர் இருந்துள்ளனர். புஷ்பாவுக்கு எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் பிரசவத்தில் பிரச்னை உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை செவிலியர்கள் சரிவர கவனிக்கவில்லை.

இதையடுத்து, இங்கேயே சுகப்பிரசவம் பார்த்து விடலாம் என செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். மாலை 6 மணிக்கு குழந்தை தலைகீழாக இருந்துள்ளது. ஆனால், தலைக்கு பதில் கால்கள் மட்டுமே வெளியே வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் மருத்துவர் ஒருவருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர். சினிமா பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவத்தை செய்யும்படி மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.மருத்துவர் சொன்ன ஆலோசனைப்படி செவிலியர்கள் செய்துள்ளனர். எவ்வளவு முயன்றும் குழந்தையின் தலை மட்டும் வெளியே வரவில்லை.  

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. பின்னர், இல்லிடு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியப் போக்கே குழந்தை இறந்து பிறந்ததாக குழந்தையின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், நேற்று கிராம மக்கள் பெண்கள் உள்பட இரு நூற்றுக்கும் மேற்பட்டோர் சூனாம்பேடு- மதுராந்தகம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.


Tags : Bustle ,Madhuranthakam , Baby dies as nurses attend delivery via video call on advice of doctors without experience: Relatives block road; Bustle near Madhuranthakam
× RELATED நிவாரணம் வழங்க வலியுறுத்தி தொழிலாளி சடலத்தை சாலையில் வைத்து மறியல்