சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். சென்னை மாநகராட்சிரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு சென்னைப் பள்ளிகளுக்கான இலச்சினையை அறிமுகப்படுத்தினர். அதை தொடர்ந்து, குறும்படத்தை வெளியிட்டனர். மேலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன்களை அடையாளம் காணும் வகையில், தமிழர்களின்  குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் பெயரில் குழு உருவாக்கப்பட்டு, பேட்ஜ்களும் மாணவர்களுக்கு வழங்கினர். இதை தொடர்ந்து, ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, இசைப் போட்டி, விளையாட்டுப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 395 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினர்.

இதை தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: போக்குவரத்துத் துறையின் சார்பில் பணியாளர்களின் வாரிசுகள் பயன்பெறும் வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டு 32 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, சென்னை மாநகராட்சி சார்பில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைக்க முதல்வரின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மகேஷ் குமார், ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர்கள் தனசேகரன், விசுவநாதன், இளைய அருணா, சர்ப ஜெயாதாஸ், சாந்தகுமாரி, நியமனக் குழு உறுப்பினர் சொ.வேலு, துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், விஷூ மஹாஜன், டி.சினேகா, எம்.சிவகுரு பிரபாகரன், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், உட்பட பலர் கலந்து கெண்டனர்.

Related Stories: