×

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூடுகிறது: ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை வெளியிட முடிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் கூடும் என தெரிகிறது. தீபாவளிக்கு முன்னதாக சட்டசபை கூட்டத்தை 5 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம், மானிய கோரிக்கை மீதான விவாதங்களுடன் கடந்த மே மாதம் 10ம் தேதி வரை நடந்து முடிந்தது. ஒரு கூட்டத்தொடர் முடிந்ததும் அடுத்த 6 மாதங்களுக்குள் மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது பேரவை விதி.

அந்த வகையில் நவம்பர் முதல்வர் வாரத்திற்குள் பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும். அதன்படி, அடுத்த மாதம் தீபாவளிக்கு முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டவும், இந்த கூட்டத்தை 5 நாட்கள் வரை நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த அறிக்கையின் முழு விவரங்களும் அடுத்த மாதம் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த அறிக்கை வெளியிடப்படும்போது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதா? இல்லையா? என்பது தெளிவாக புரிந்து விடும். இதில் குறிப்பிட்ட சிலரும் சிக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்து, வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையும் வெளியாக வாய்ப்புள்ளது. ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை மற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை போன்ற அவசர சட்டங்களும் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும், அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தார். அந்த கடிதத்தின் மீது சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதே இருக்கையில் இடம் ஒதுக்கப்படுமா அல்லது வேறு இடம் ஒதுக்கப்படுமா என்ற விவரங்கள் அடுத்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் தெரிந்து விடும். இதனால் விரைவில் நடைபெற்ற உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Jayalalithaa , Tamil Nadu Legislative Assembly to meet next month amid tense political climate: Decision to issue statement on Jayalalithaa's death
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...