சோனியா காந்தியை சசிதரூர் சந்தித்த நிலையில் நாளை மறுநாள் காங். தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு: ராகுல் தொடர்ந்து அமைதி காப்பதால் பரபரப்பு

புதுடெல்லி: நாளை மறுநாள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் சோனியா காந்தியை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு நாளை மறுநாள் (செப். 22) வெளியிடப்படும். அன்றைய தினம் தேர்தலில் வாக்களிக்க கூடிய வாக்காளர்கள் (கட்சியின் பிரதிநிதிகள்) பட்டியல் வெளியாக உள்ளது. வேட்புமனு தாக்கல் 24ம் தேதி முதல் 30ம் தேதி  வரை நடைபெறும்.

வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 8ம் தேதி. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தால், அக்டோபர் 17ம் தேதி  வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அக்டோபர் 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள்  அறிவிக்கப்படும். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் கட்சியின் தலைமைப் பதவிக்கு ராகுல் காந்தியே அவரது முதல் தேர்வு என்று என்று கூறப்படுகிறது.

அதனால் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அதேநேரம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனநிலையில் உள்ள எம்பி சசிதரூர், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர்கள் பலர் உடனிருந்தனர்.

தேர்தலில் போட்டியிட சோனியா காந்தியிடம் சசிதரூர் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா?, அல்லது யாரை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ராகுல் காந்தி இன்னும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை. இருந்தும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல்காந்தியே மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: