×

ஆசிரியர் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்; தேர்வில் சினிமா பாடல்களை எழுதிய மாணவிகளை கண்டித்தது தவறா?... குமரி ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிறிஸ்துதாஸ். வகுப்பறையில் மாணவ, மாணவிகளிடம் ஆபாசமாக பேசினார் என்ற புகாரின் பேரில் சமீபத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இரு மாணவிகள் நேரடியாக வந்து புகார் அளித்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டு, சில நபர்கள், அமைப்புகளின் தூண்டுதல்களின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். எனவே ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் இயக்கங்கள் போர்க்கொடி தூக்கி உள்ளன.

இது தொடர்பாக குமரி மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேற்று மாலை கருப்பு பேட்ஜ் அணிந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் கிறிஸ்துதாஸ் கடந்த 24ம் தேதி பிளஸ்-1 வகுப்புக்கு நடத்திய தேர்வில் இரண்டு மாணவிகள் சினிமா பாடலை பதிலாக எழுதி உள்ளனர். இதனால் மாணவிகளிடம் பெற்றோரை அழைத்து வரும்படி கிறிஸ்துதாஸ் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் மற்றும் சிலர் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தவறு இல்லை என அறிக்கை கொடுத்துள்ளார். ஆனால் பள்ளிக்கு தொடர்பு இல்லாத ஒரு அமைப்பை சேர்ந்த கும்பல் பள்ளிக்குள் அத்துமீறி புகுந்து ஆசிரியரை தாக்க முயன்று, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

முதற்கட்டமாக நடந்த அனைத்து விசாரணையிலும் ஆசிரியர் மீது தவறு இல்லை என அறிக்கை கொடுத்த நிலையில் கடந்த 14-ம் தேதி போலீசார் திடீரென போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கிறிஸ்துதாசை கைது செய்துள்ளனர். மேலும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்செயல் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தவறு செய்யாத ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். பொய்யாக போடப்பட்டுள்ள போக்சோ வழக்கை ரத்து செய்து, அவருக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவர் அந்த கோரிக்கை மனுவில் கூறி இருந்தனர்.


Tags : Kumari Teacher Associations ,Bwarkodi , False case against the teacher, film song in the exam, is it wrong to reprimand the students?, Kumari teachers unions war flag
× RELATED சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை...