×

கொரட்டூரில் குற்றச்செயல்களை தடுக்க 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

அம்பத்தூர்: கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் குற்றச்செயல்களை தடுப்பதற்காக  40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. சென்னை கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  பகுதிகளான கொரட்டூர், பாடி, பட்டரைவாக்கம், முகப்பேர் ரோடு, கருக்கு மேம்பாலம், பாடி மேம்பாலம்  உள்ளிட்ட பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் குற்றசம்பவங்களை தடுக்கும்விதமாக கண்காணிப்பை தீவிரப்படுத்த அம்பத்தூர் உதவி ஆணையர் கனகராஜ் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி துல்லியமான காட்சிகளை பதிவு செய்யக்கூடிய 40 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் வாங்கப்பட்டு, மேற்கண்ட இடங்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்  கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் மேற்கண்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை வைத்து  நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்ற சம்பவத்தில் ஈடுபடும் நபர்களின்  உருவத்தை இரவு நேரங்களிலும் மிக துல்லியமாக காண முடியும் எனவும், குற்ற சம்பவங்களில்  ஈடுபடுவோரின் வாகனங்களின்  எண்ணையும் தெளிவாக காண முடியும்.  ஒலி, ஒளி ஆகியவற்றை பதிவு செய்யும் திறன் அதிகமுடைய இந்த கேமராக்கள் பேரிடர் காலங்களிலும் சிறப்பாக செயல்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிசிடிவி கேமராக்களை கொரட்டூர் காவல் நிலையத்திலிருந்து ஆவடி காவல் ஆணையரகத்தின்  கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்தபடியே போலீசாரால் கண்காணிக்க  முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.


Tags : Koratur, installation of CCTV cameras to prevent crime,
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...