கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் இனி எச்சில் மூலம் பந்தை பளபளப்பாக்கக்கூடாது: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிரந்தர தடை

ஐக்கிய அமீரகம்: கிரிக்கெட் போட்டியின் போது உமிழ் நீரால் பந்தை பளபளப்பாக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. மைதானத்தில் வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகளில் சில மாற்றங்களை ஐசிசி கொண்டு வந்துள்ளது. சவுரவ் கங்குலி தலைமையிலான கிரிக்கெட் கமிட்டி, மைதானத்தில் கடைபிடிக்க வேண்டிய சில விதிகளை பரிந்துரைத்திருந்தது. அதில் சிலவற்றை ஏற்றுக்கொண்டுள்ள ஐசிசி புதிய மாற்றங்களை பட்டியலிட்டுள்ளது. அதன்படி, மைதானத்தில் உமிழ் நீரால் பந்தை பளபளப்பாக்குவது தடை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் எச்சில் மூலம் பரவும் என்பதால் வீரர்கள் பந்தை எச்சில் மூலம் பளபளப்பாக்கும் செயலுக்கு 2 ஆண்டுகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 1ம் தேதி முதல் நிரந்தர தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. வீரர்கள் தங்கள் வியர்வை அல்லது துணி மூலம் மட்டுமே பந்தை துடைத்து பாலிஷ் செய்ய முடியும். ஒருவர் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும்போது மற்றொரு வீரர் 2 நிமிடங்களுக்குள் களத்திற்குள் வந்து பந்தை எதிர்கொள்ள வேண்டும். இந்த விதி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டிகளில் வீரர்கள் மாறுவதற்கான 90 வினாடிகள் கால அவகாசத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Related Stories: