புதுவை கடற்கரையில் நிர்வாணமாக ஓடிய வாலிபர்

* பொதுமக்கள் அதிர்ச்சி

* துரத்தி பிடித்த போலீசார்

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் நிர்வாணமாக ஓடிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, அந்த வாலிபரை துரத்தி பிடித்து கைது செய்தனர்.

புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே கடலில் நேற்று மாலை 6.15 மணியளவில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தார்.

இங்கு இதுபோல் குளிக்கக் கூடாது என அங்கிருந்த சிலர் கூறியுள்ளனர். ஆனால் அந்த நபர் கேட்கவில்லை. இதுபற்றி பெரியகடை போலீசுக்கு தகவல் வந்தது. ஏட்டு லோகநாதன், காவலர் லட்சுமிகாந்தன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். போதையில் நிர்வாணமாக குளித்து ரகளை செய்த வாலிபரை எச்சரித்தனர்.

ஆனால் அந்த வாலிபர், திடீரென கடற்கரையில் நிர்வாணமாக ஓட்டம் பிடித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், கையில் துணியுடன் வாலிபரை பிடிக்க பின்னாலேயே ஓடிச் சென்றனர். பின்னர் ஒரு வழியாக பிடித்து உடையை உடுக்கச் செய்தனர்.

பின்னர், காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ரியாஸ் என்ற முகமது இப்ராகிம் (21) என்பதும், நண்பர்களுடன் சுற்றுலா வந்தவர், மது குடித்துள்ளார். போதையில் தனியாக கடற்கரைக்கு வந்து நிர்வாணமாக குளித்து ரகளை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் விடுவித்தனர். தொடர்ந்து, அறிவுரைகளை கூறி, ரியாசை அவரது நண்பர்களுடன் அனுப்பி வைத்தனர்.

Related Stories: