நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை கோரி சேலம் கலெக்டர் ஆபீசில் தம்பதி தீக்குளிக்க முயற்சி-போலீசாருடன் தள்ளுமுள்ளு

சேலம் : சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வயதான தம்பதியினர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஆத்தூர் நரசிங்கபுரம் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிரேம்சந்திரன் (74). இவர் நேற்று மதியம், தனது மனைவி சிவானந்தஜோதி (63), மகன் குருசந்திரமூர்த்தி (30) ஆகியோருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நுழைவுவாயில் பகுதிக்கு வந்தவுடன், திடீரென பிரேம்சந்திரன் தன் மீதும், மனைவி மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீர் ஊற்று ஆசுவாசப்படுத்தினர்.

பின்னர், அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, ‘‘தங்களுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்துக்கொண்டு தர மறுக்கிறார். நிலத்தை மீட்டு தரக்கேட்டு 18 முறை வருவாய்த்துறை அதிகாரிகள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தர வேண்டும். கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை இல்லாததால் வேறு வழியின்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் வந்தோம்,’’ என்றனர்.

தொடர்ந்து இருவரையும் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோவில் ஏறுமாறு போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் ஏறமறுத்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், தம்பதி மற்றும் அவர்களது மகனை போலீசார் சமாதானப்படுத்தி, ஆட்டோவில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: