×

ஊசூர் அருகே அரசு பள்ளியில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அணைக்கட்டு : ஊசூர் அடுத்த சிவநாதபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டதால் வகுப்பறை கட்டிடம் இன்றி மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் பாடம் படித்து வருகின்றனர். எனவே, கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட சிவநாதபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் இருந்தது. இதில் 4 கட்டிடங்கள் சேதமானதால் கடந்த ஆண்டு 4 வகுப்பறை கட்டிடங்களும் இடித்து அகற்றப்பட்டது. தற்போது தலைமை ஆசிரியர் அறை மற்றும் 2 வகுப்பறை கட்டிடம் மட்டுமே உள்ளன.

இதனால் தலைமை ஆசிரியர் அறையில் எல்கேஜி, யுகேஜி, 1ம் வகுப்பு மாணவர்கள் அமர வைக்கப்பட்டு பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. 2, 3 வகுப்புகளுக்கு அறைகள் உள்ளன. 4, 5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்கள் மரத்தடியிலும், 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்ட இடத்தில் வெட்டவெளியில் விவசாய நிலத்தின் ஓரம் மரத்தடியில் அமர்ந்து பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அருகே கால்வாய் உள்ளதால் அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி தேங்கியுள்ளது. அதன் பக்கத்தில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

மழை மற்றும் வெயில் நேரங்களில் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மிகுந்து சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இடிக்கப்பட்ட இடத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்திலும் அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

பள்ளி அருகே வேறு அரசு கட்டிடங்கள் இல்லாததாலும், கிராமத்தில் மாணவர்கள் அமர போதிய வசதிகளுடன் கூடிய வாடகை கட்டிடங்கள் கிடைக்காததாலும் ஆசிரியர்கள், மாணவர்கள் தவித்து வருகின்றனர். எனவே சிவநாதபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் அமர்வதற்கு வசதியாக கூடுதலாக வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை விரைவாக தொடங்கவேண்டும் என பொதுமக்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘பள்ளிக்கட்டிடம் கட்டத்தொடங்கினாலும் முடிந்து பயன்பாட்டிற்கு வர 3 மாதத்திற்கு மேலாகும். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அதுவரை மாணவர்கள் அச்சமின்றி அமர தகர சீட் மேற்கூரை அமைத்து தரவேண்டும்’ என்றனர்.

Tags : Usur , Embankment: Sivanathapuram government middle school next to Usur has demolished the old building, so students are sitting under trees without a classroom building.
× RELATED சிவநாதபுரம்-அத்தியூர் வரை புதிதாக அமைக்கப்பட்ட தரமற்ற தார் சாலை