மசினகுடி கேம்பில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்-நீலகிரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ஊட்டி : மசினகுடி கேம்ப் பகுதியில் 38 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஊட்டி அருகேயுள்ள சிங்காரா பகுதியில் பைக்காரா இறுதி மின் திட்டப் பணிகள் கடந்த 1985ம் ஆண்டு துவங்கி சுமார் 15 ஆண்டுகளாக நடந்து வந்தது. மின் நிலையம் மற்றும் சுரங்கம் அமைக்கும் பணிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டது.

இப்பணிகள் மேற்கொள்வதற்காக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற மாட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் இங்கு பணியாற்றி வந்தனர். இந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளும்போது, கட்டுமான தொழிலாளர்களுக்காக மசினகுடி பகுதியில் மின் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் ஷெட் அமைத்து தங்கிக் கொள்ள மின் வாரியம் அனுமதியளித்தது. கட்டுமான பணிகள் முடிந்த சில ஆண்டுகளில் மின் வாரிய இடத்தில் தங்கியிருந்தவர்களை காலி செய்யக் கோரி மின் வாரியம் அறிவுறுத்தியது. ஆனால், அவர்கள் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த நிலையில், வேறு இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், மின் வாரியமோ அல்லது வருவாய்த்துறையோ இவர்களுக்கு மாற்று இடம் அளிக்கவில்லை. இதனால், மசினகுடி கேம்ப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஷெட்டில்  வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பையும் மின்வாரியம் துண்டித்துள்ளது. இதனால், மின் வசதியின்றி இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனுப்போர் நடத்தி வருகின்றனர்.

ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுக் கொண்டதாக தெரியவல்லை. இந்நிலையில், நேற்று மசினகுடி கேம்ப் பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் தனித்தனியாக மனுக்களையும் அளித்தனர்.

அந்த மனுவில், நாங்கள் 38 ஆண்டுகளுக்கு மேலாக மசினகுடி கேம்ப் பகுதியில் வசித்து வருகிறோம். தற்போது எங்களை அப்பகுதியில் இருந்து காலி செய்யுமாறு மின் வாரியம் வற்புறுத்தி வருகிறது. எங்களது குழந்தைகள் மசினகுடி, கூடலூர் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். எனவே, நாங்கள் இங்கிருந்து காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு மாற்றும் இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மின் வாரியம் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் வசித்து வந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் வழங்கியுள்ளது. அதேபோன்று மசினகுடி கேம்ப் பகுதி மக்களுக்கும் மாற்றும் இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: