×

வலங்கைமான் தாலுகா பகுதியில் பழமையான 8 கோயில்களுக்கு திருப்பணி செய்ய முடிவு

*பழமை மாறாமல் புனரமைக்கும் பணி

*அறநிலையத்துறை நடவடிக்கை

வலங்கைமான் : இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 8 கோயில்களுக்கு திருப்பணி செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வரலாற்று சிறப்பும் தொன்மையும் வாய்ந்த கோயில்கள், ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் பாடிப்புகழப்பட்ட கோயில்கள், பிரார்த்தனை முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள், கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிறு கோயில்கள், ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளிலுள்ள சிறு சிறு கோயில்கள் ஆகிய பல்வேறு புணிதமான கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

இவற்றினை திருப்பணி செய்து புதுப்பிக்கும் இன்றியமையாத பணியினை பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை கோயில்களின் சொந்த நிதி, நிதிமாற்ற நிதி, அரசு மானியம் பொதுநல நிதி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், ஆலய மேம்பாட்டு நிதி, கிராமப்புற கோயில்கள் திருப்பணி நிதி, கோயில் திருப்பணி மற்றும் அறப்பணி நிதி உபயத் திருப்பணி நிதி ஆணைய மானியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள கோயில்களுக்கான திருப்பணி நிதி, சுற்றுலாத்துறை நிதி ஆகிய நிதிகள் மூலம் இந்து சமய அறநிலைத்துறை திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திமுக அரசு பொறுப்பேற்று பல்வேறு துறைகளும் முடுக்கி விடப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் பழமையான கோயில்கள் அடையாளம் காணப்பட்டு பழமை மாறாமல் புனரமைக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக அறநிலையத்துறையின் மூலம் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருந்த நிலையில் அவற்றை அடையாளம் காணப்பட்டு உடனடியாக பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வகையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சக்தி ஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படும் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் மகாமாரியம்மன் கோயிலில், இந்துசமய அறநிலையதுறை பொது நிதியிலிருந்து ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய உணவுக்கூட கட்டிடம் கட்டப்பட்டது. உணவுகூட வளாகத்தில் சிலிண்டர் வசதியுடன் கூடிய தனி சமயலறை மற்றும் ஒரே நேரத்தில் நூறு பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அன்னதான கட்டிடம் கட்டப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்த நிலையில் அன்னதான கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திறந்து வைத்தார்.

மேலும் வலங்கைமான் தாலுகாவில் நகர் பகுதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயில்,ஐம்பெரும் சிவாலயங்களில் ஒன்றான விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் மற்றும் சந்திரசேகரபுரம் விஸ்வநாத சுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்கு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் திருப்பணி வேலைகள் உபயதிருப் பணியாக நடைபெற்று வருகிறது.

கிராமத்தில் பணியாக வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோயில் தொழுவூர் ஊராட்சியில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் சந்திரசேகரபுரம் ஊராட்சியில் உள்ள பிரமானந்தா மடம் படத்து பிள்ளையார் கோயில் ஆகியவை அரசு நிதியின் மூலம் திருப்பணி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் 1000 ஆண்டு பழமையான கோயில்கள் அடையாளம் காணப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த மேலவிடையல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டாங்கோயில் கிராமத்தில் ஸ்ரீ சிவசேகரி அம்பிகா சமேத ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளது. சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த இக்கோயிலில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ருது பரிகார ஸ்தலம் என அழைக்கப்படும் இக்கோயில் அப்பர் சுவாமிகளால் பாடல்பெற்ற ஸ்தலமாகும்.இந்த சுவர்ணபுரீஸ்வரர் கோயில் திருப்பணி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் நகரத்தில் பணியாக வலங்கைமான் நகரத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள நாவலடி பிள்ளையார் கோயில் திருப்பணி செய்வதற்கு நடவடிக்கைகள் இந்து சமய அறநிலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே போன்று வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களில் ஒன்றான லட்சுமி நாராயண பெருமாள் கோயில் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் அக்கோயிலை புனரமைத்து குடமுழுக்கு செய்திட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் நிர்வாக அனுமதி பெறப்பட்டு பக்தர்கள் பங்களிப்புடன் குடமுழுக்கு நடைபெறும் எனக்கூறப்பட்டுள்ளது.

Tags : Valangkaiman , Valangaiman: On behalf of the Hindu Religious Charities Department, 8 temples in the areas under Valangaiman taluk will be repaired.
× RELATED வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில்...