×

ஆம்னி பேருந்துகளில் அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: ஆம்னி பேருந்துகளில் அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பண்டிகைகளை சொந்த ஊருக்கு சென்று, உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டுமென்ற நோக்கத்தில், நகர்ப்புறங்களிலிருந்து, குறிப்பாக சென்னையிலிருந்து, எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதற்காக மக்கள் பேருந்துகளில் பயணிக்கத் துடிப்பதும், இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அளவுக்குமீறி கட்டணத்தை உயர்த்துவதும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

பொதுவாக, பொங்கல் பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசியப் பண்டிகைகள் வரும்போது அதனையொட்டி சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்கள் வந்தாலோ அல்லது ஓரிரு நாட்கள் விடுப்பு எடுத்தோ நகர்ப்புறத்திலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் செல்வது வழக்கம்.  

அந்த வகையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட திட்டமிட்டிருக்கும் சூழ்நிலையில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் சென்னையிலிருந்து திருச்சி வரை செல்ல 2,000 ரூபாயும், மதுரை வரை செல்ல 2,500 ரூபாயும், கோவை செல்ல 2,350 ரூபாயும், திருநெல்வேலி செல்ல 2,700 ரூபாயும், தூத்துக்குடி செல்ல 2,500 ரூபாயும், நாகர்கோயில் செல்ல கிட்டத்தட்ட 4,000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் செய்திகள் வருகின்றன.

குளிர்சாதனமில்லா படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் மற்றும் அமரும் வசதி கொண்ட பேருந்துகள் ஆகியவற்றிலும் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு கட்டணம்  வசூலிக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.  பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால், பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு கட்டணம் மேலும் உயரும் என்றும், இந்த அளவுக்கு கட்டணத்தைச் செலுத்தி ஊருக்கு செல்ல வேண்டுமா என்று யோசிக்கும் அளவுக்கு மக்கள் தள்ளப்படுவதாகவும், பண்டிகை காலத்தின்போது இது தீராத பிரச்சனையாக உள்ளது என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பேருந்துக் கட்டணம் கிட்டத்தட்ட விமானக் கட்டணத்திற்கு இணையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தீராத பிரச்சனைக்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பண்டிகைக் காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் அரசுப் பேருந்துகளை அதிக அளவில் இயக்குவதும், பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் விதிக்கப்பட வேண்டிய பேருந்துக் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்வதும் தான் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  இதனைச் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு நிச்சயம் உண்டு.

எனவே,  தமிழ்நாடு முதலமைச்சர்  இதில் உடனடியாகத் தலையிட்டு, பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் அரசுப் பேருந்துகளை அதிக அளவில் இயக்கவும், பொதுமக்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்களின் நலன்கள் பாதிக்காத வகையில் ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கவும் நடவடிக்கை எடுத்து, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu govt ,O. Panneerselvam , Omni Bus, Fare, Government of Tamil Nadu, O. Panneerselvam
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...