×

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், தேனி மாவட்டத்தில் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி துறைகளால் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை சிலர் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். இதனை தெரியாமல் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற சட்டமும் உள்ளது. எனவே சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட அனைத்து பத்திரங்களையும் ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக இந்த பத்திரப்பதிவுக்கு துணையாக இருந்த பத்திரப்பதிவு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத்  அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன? முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்? ஆவணங்களுடன் புகார் பெறப்பட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, தமிழக அரசால் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதி, முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, அதற்கான அறிக்கையை பத்திரப்பதவித்துறை ஐஜி உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 


Tags : ICourt , Unauthorized house land, deed, icourt branch
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு