ஈரோட்டில் 30 ஆண்டு கால மரம் அனுமதியின்றி வெட்டி அகற்றம்-ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் வனத்துறை ஆய்வு

ஈரோடு : ஈரோட்டில் 30 ஆண்டு கால மரம் அனுமதியின்றி வெட்டி அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில், வனத்துறையினர் ஆய்வு செய்து, அளவீடு செய்தனர்.

ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த சுமார் 30 ஆண்டு கால பழமை வாய்ந்த வேப்ப மரம் இருந்தது. இந்த மரத்தை கடந்த சில நாட்களுக்கு முன் சி.எஸ்.ஐ. நிர்வாகத்தினர் எவ்வித அனுமதியின்றி, மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும், அந்த இடத்தில் கட்டுமான பணிகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் புகார் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ் குமார், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை அழைத்து பேசி சமாதானம் செய்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஈரோடு ஆர்டிஓ சதீஷ்குமார், மரம் வெட்டப்பட்ட இடத்தினை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

இதன்பேரில், ஈரோடு டவுன் வருவாய் ஆய்வாளர் விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் வனத்துறையை சேர்ந்த மரம் அளவீட்டாளர் ஒருவர், அரசின் முறையான அனுமதியின்றி வெட்டி அகற்றப்பட்ட வேப்ப மரம் இருந்த இடத்தில் ஆய்வு செய்து, மரத்தின் வெட்டப்பட்ட கீழ் பகுதியின் சுற்றளவை டேப் மூலம் அளவீடு செய்தார். வேப்ப மரம் எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது?. வெட்டி அகற்றும் முன் எந்த நிலையில் இருந்தது?. என்பது குறித்த பல்வேறு விபரங்களை சேகரிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அனுமதியின்றி வெட்டி அகற்றப்பட்ட மரத்தின் விபரம் குறித்து வருவாய் துறைக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், இதன்பேரில் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என வனத்துறை அலுவலர் தெரிவித்தார். இந்த அளவீடு செய்யும் பணியின்போது ஈரோடு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: