×

மாணவ, மாணவியர் சாப்பிடும் முன்பு சத்துணவு பரிசோதனை ஒவ்வொரு நாளும் மாதிரி உணவினை சேமித்து வைக்க வேண்டும்-தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் அரவிந்த் உத்தரவு

நாகர்கோவில் : குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:குமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கீழ், தடிக்காரன்கோணம் ஊராட்சி பகுதியில் மாநில உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ₹3.50 கோடி மதிப்பில் கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை மற்றும் கீரிப்பாறை தொழிலாளர் காலனிக்கு செல்வதற்கு புதிதாக 2 பாலங்கள் அமைக்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ₹2.40 லட்சம் மதிப்பில் பயனாளி டயனா மேரி  வீட்டின் பணி செயல் அளவில் முடிக்கப்பட்டிருந்ததோடு, ரூ.2.40 லட்சம் மதிப்பில் மற்றொரு பயனாளியான தாவீது என்பவரது வீட்டின் பணி செயல் அளவில் முடிக்கப்பட்டிருந்ததை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ₹1.99 லட்சம் மதிப்பில் மண்புழு உரம் கொட்டகை அமைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, பணியினை விரைந்து ஆரம்பிக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, தடிக்காரன்கோணம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2006ல் கட்டப்பட்ட சமூக நலக்கூடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு அருந்தும் கட்டிடத்தில் பழுதடைந்துள்ள உணவு அருந்தும் மேசைகள் மற்றும் டைல்ஸ் சரி செய்ய வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து அருமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை மற்றும் வேதியியல் ஆய்வுக்கூடம் ஆய்வு மேற்கொண்டதோடு, அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்திலுள்ள சமையலறை ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும்  உணவின் தரம் குறித்து தலைமையாசிரியர்களிடம் கேட்டறிந்து, மாணவ, மாணவியர்கள் சாப்பிடும் முன் பொறுப்பு ஆசிரியர் பரிசோதனை மேற்கொள்வதோடு, ஒவ்வொருநாளும் மாதிரி உணவினை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டது.

 மேலும் ₹1.92 லட்சம் மதிப்பில் வீரவநல்லூரில் கிடைமட்ட உறிஞ்சுக்குழி அமைக்கும் பணி முடிக்கப்பட்டிருந்ததை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறச்சக்குளம் ஊராட்சி பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ₹15.27 லட்சம் மதிப்பில் இறச்சக்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிட பணியினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ₹4.29 லட்சம் மதிப்பில் இறச்சகுளம் பிளசன்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் நடைப்பாதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, ஈசாந்திமங்கலம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ₹60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிட பணி என மொத்தம் ₹4.38 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்ற தலைவர் பிராங்கிளின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,Arvind , Nagercoil: On behalf of Kumari District Rural Development Agency, the areas under Dovalai Panchayat Union are being conducted.
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...