2 ஆண்டாக வாடகை பாக்கி செலுத்தாத 400 கடைகளுக்கு சீல் வைக்க முடிவு: வேறு நபருக்கு வாடகைக்கு விடப்படும், சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு கடந்த 2 ஆண்டாக வாடகை பாக்கி செலுத்தாத 400 கடைகளுக்கு சீல் வைக்கவும், அந்த கடைகளை வேறு வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக 1,500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை, மாத வாடகை அடிப்படையில் வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கடைகள் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.4 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாயை பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு, மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது. ஆனால், மாநகராட்சி கடைகள் என்பதால் அதனை வாடகைக்கு எடுத்த பலர், மாதம்தோறும் முறையாக வாடகையை செலுத்தாததால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் முறையாக வாடகை பாக்கி செலுத்தாதவர்களின் விவரங்களை மண்டலம் வாரியாக அதிகாரிகள் சேகரித்து, வாடகை வசூல் செய்வதை தீவிரப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, மாநகராட்சி கடைகளில் வியாபாரம் செய்பவர்கள், மாதம்தோறும் முறைப்படி வாடகையை கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும், அப்படி செலுத்தாதவர்களிடம் இருந்து கடையை சீல் வைப்பதுடன், அந்த கடையை வேறு நபர்களுக்கு வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.  அதன்படி, மண்டலம் வாரியாக அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட சோதனையில், 400 கடைகளுக்கு அதன் உரிமையாளர்கள் கடந்த 2 ஆண்டாக வாடகை பாக்கி செலுத்தாதது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் வாடகை பாக்கியை செலுத்த தவறினால், சம்பந்தப்பட்டவர்களின் கடைகள் சீல் வைக்கவும், அந்த கடைகள் வேறு நபருக்கு வாடகைக்கு விடவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு முறையாக வாடகையை செலுத்தி வந்த சிலரும், கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில், வாடகை செலுத்துவதை கைவிட்டனர். அதன் பின், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட போதும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டியை வாடகை பாக்கியை பல கடைகளின் உரிமையாளர்கள் செலுத்தாமல் உள்ளனர்.

கொரோனா காலத்தில் இவர்களுக்கு எந்த வித அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆனால் அதையே தொடர்வதை ஏற்க முடியாது. முழுமையாக வாடகை பாக்கியை செலுத்தினால் மட்டுமே கடைகளை நடத்த அனுமதிக்க முடியும். எனவே, கடந்த 2 ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாத மேலும் 400 கடைகளின் பட்டியலை தயாரித்து உள்ளோம். ஓரிரு வாரங்களில் முழுமையான வாடகையை செலுத்த இந்த கடைகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வாடகையை செலுத்தாவிட்டால் இந்த கடைகளை மூடி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களிடம் இருந்து கடையை பறித்து வேறு வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது,’’ என்றனர்.

* ஒருவாரம் காலக்கெடு

சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை பாக்கி  செலுத்தாத கடைகளின் உரிமையாளர்களுக்கு இதுபற்றி தகவல்  தெரிவிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரம் அவர்களுக்கு கால அவகாசம்  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்துக்குள் வாடகை பணம் செலுத்தாவிட்டால்  அந்த கடைகளை மூடி சீல் வைப்பதற்கான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

*கடை நடத்துபவர்களுக்கு கொரோனா காலத்தில் வாடகை பாக்கி தொடர்பாக எந்த வித அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆனால் அதையே தொடர்வதை ஏற்க முடியாது. முழுமையாக  வாடகை பாக்கியை செலுத்தினால் மட்டுமே கடைகளை நடத்த அனுமதிக்க முடியும்.

*ரூ.2,000 கோடி வருவாய்

சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி, தொழில் வரி ஆகியவை பிரதானமாக உள்ளன. இந்த வரி வாயிலாக ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் வரை, மாநகராட்சி வருவாய் கிடைக்கிறது. இதை தவிர உரிமப்  பதிவு, மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் இருந்து கிடைக்கும் வாடகை  போன்றவற்றாலும், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது.

*ரூ.1.5 கோடி வசூல்

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளின் வாடகை பாக்கி தொடர்பாக மண்டலம் வாரியாக அதிகாரிகள் நடத்திய சோதனையில், 3 ஆண்டுகளுக்கு மேல் வாடகை செலுத்தாமல் இருந்த 400க்கும் மேற்பட்ட கடைகள் சமீபத்தில் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன. இந்த நடவடிக்கை எதிரொலியாக, மாநகராட்சிக்கு ரூ.1.5 கோடி வாடகை பாக்கி வசூலாகி உள்ளது. கடை நடத்துபவர்களுக்கு கொரோனா காலத்தில் வாடகை பாக்கி தொடர்பாக எந்த வித அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆனால் அதையே தொடர்வதை ஏற்க முடியாது. முழுமையாக  வாடகை பாக்கியை செலுத்தினால் மட்டுமே கடைகளை நடத்த அனுமதிக்க முடியும்.

Related Stories: