×

சிதிலமடைந்த தாழ்வான கட்டிடத்தால் சிறிய மழைக்கே தத்தளிக்கும் ஆதம்பாக்கம் காவல் நிலையம்; அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், 165 வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் ஆதம்பாக்கம் காவல் நிலையம் அமைந்துள்ளது. பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், வேளச்சேரி,  கிண்டி காவல் நிலைய எல்லைகள் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் 161,  162, 163, 165வது வார்டுகள், வேளச்சேரி மற்றும் கிண்டியில் தலா 1 வார்டுகளை உள்ளடக்கி இந்த காவல் நிலையம் செயல்படுகிறது. கடந்த 1970ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசனால், தனியாருக்கு சொந்தமான இடத்தில் இந்த காவல் நிலையம் திறக்கப்பட்டது. ஓடு வேய்ந்த கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த காவல் நிலையம், தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் மேற்கூரை ஒழுகுவதால் முக்கிய ஆவணங்கள் நனைந்து நாசமாகிறது.

மேலும், காவல் நிலைய கட்டிடம் தாழ்வாக உள்ளதால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து காவல் நிலையத்திற்குள் புகுந்து விடுகிறது. இதனால்,  ஆய்வாளர்கள், காவலர்கள் பணிசெய்ய முடியாத நிலையும் ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் வாகன நிறுத்த பகுதியில் காவல் நிலையம் செயல்படும். மேலும், ஆண்டுதோறும் பெருமழை காலங்களில் அந்த பகுதியில் எந்த கட்டிடம் காலியாக உள்ளதோ அங்கு தற்காலிகமாக காவல் நிலையம் செயல்படும். சாலையை ஒட்டி காவல் நிலையம் உள்ளதால் ஜீப் மற்றும் ரோந்து வாகனம் எதிரே நின்றாலே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த காவல் நிலையத்தில் லாக்கப் வசதி இல்லை. இங்கு காவலர் மற்றும் பெண் காவலர்களுக்கென ஓய்வறைகள் கூட கிடையாது.

கொலையாளிகள், பெருங்குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை விசாரிக்க காவல் நிலையத்தில் இடமில்லாததால், அவர்களை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த காவல் நிலையத்தை சுற்றியுள்ள பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி போன்ற காவல் நிலையங்கள் அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டிடங்களில் செயல்படும் நிலையில், ஆதம்பாக்கம் காவல் நிலையம் மட்டும் பல ஆண்டாக மிகவும் மோசமான நிலையில் கூடாரம் போல் காட்சி அளிக்கிறது. கொலை மற்றும் குற்ற சம்பங்கள் அதிகம் நடைபெறும் ஆதம்பாக்கத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய காவல்நிலையம் இல்லாததால் போலீசார் சிரமத்துடன் பணிபுரிந்து வருகின்னர். எனவே, இந்த காவல் நிலையத்திற்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Aadhampakkam police station , Aadhampakkam police station swaying in light rain from a dilapidated low-rise building; Request to construct a new building with basic facilities
× RELATED சிதிலமடைந்த தாழ்வான கட்டிடத்தால்...