அண்ணா நினைவு இல்ல ஆய்வின்போது நலத்திட்டங்களை விளம்பரப்படுத்த 20 மாநகராட்சிகள் தேர்வு: அமைச்சர் சாமிநாதன் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் ஆய்வு செய்தபோது, ‘அரசின் நலத்திட்டங்களை விளம்பரப்படுத்த 20 மாநகராட்சிகளை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு இல்லத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவரது, நினைவு இல்லத்தில் இருந்த அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்களையும், பார்வையிட்டதுடன் அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டிலும் தனது வருகையை பதிவு செய்தார்.

பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:  முன்னாள் முதல்வர் அண்ணா வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த இல்லத்தை செய்தித்துறை பராமரிப்பது மிகவும் பெருமையாகவும் இருக்கிறது. சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், சமுதாயத்திற்காக உழைத்தவர்கள், மொழிக்காக பாடுபட்டவர்கள் ஆகியோர்களுக்கு நினைவு இல்லங்கள் அமைத்து, பராமரித்து வருகிறது செய்தித்துறை, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியுடன் இணைந்து கிராமங்கள் தோறும் சென்று பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திய பெருமைக்குரியவர் அண்ணா.

அரசு செய்து வரும் பல்வேறு நலத்திட்டங்களையும் விரைவாக மக்களைப் போய் சேருவதற்காக சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விளம்பரம் செய்து வருகிறோம். அரசு நலத்திட்டங்களை மின் சுவர் மூலம் விளம்பரப்படுத்துவதற்காக 20 மாநகராட்சிகளை தேர்வு செய்துள்ளோம். அதில் முதற்கட்டமாக 10 மாநகராட்சிகளுக்கு ஒப்பந்தம் விடும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் அரசின் செய்திகளும், மக்கள் நலத்திட்டங்களும் மக்களுக்கு விரைவாக போய்ச்சேர்ந்து விடும். நீதிமன்ற தீர்ப்பின்படி அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். பத்திரிகையாளர்களுக்கென தனியாக நல வாரியம் தமிழக முதல்வரால் அமைக்கப்பட்டு அக்குழு 3 முறை கூடி ஆலோசனை நடத்தியிருக்கிறது.

அதன்படி, விரைவில் பத்திரிக்கையாளர்களுக்கு அரசின் அங்கீகார அடையாள அட்டை வழங்ந்தொடர்பு அலுவலர்களுக்கு தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், கோட்டாட்சியர் கனிமொழி, மக்கள் தொடர்பு அலுவலர் ப.கணேசன் ஆகியோர் அண்ணாவின் நினைவு இல்லத்தின் முன்பாக அமைச்சருக்கு புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். அமைச்சரது ஆய்வின்போது திமுக காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் ஜெகன்னாதன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பலரும் உடனிருந்தனர்.

Related Stories: