தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கப்பட்டதால் மாற்று இடம் வழங்க வேண்டும்: கலெக்டரிடம் குடியிருப்புவாசிகள் மனு

காஞ்சிபுரம்: விஆர்பி சத்திரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கப்பட்டதால் மாற்று இடம் வழங்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 11வது வார்டு விஆர்பி சத்திரம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், சுமார் 60க்கும் மேற்பட்ட வீடுகள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு வேறு எந்த நிலங்களும் இல்லாத காரணத்தால் தற்போது இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.

மேற்படி இடத்தை எடுக்கும் பட்சத்தில் தங்களுக்கு அதே பகுதியில் உள்ள வேறு இடத்தில் மாற்று இடம் வழங்க கோரி‌ காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் நேற்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். தற்போது, இதனால் பள்ளிகள் படிப்பு தடைபடக்கூடாது, தொழில் சார்ந்த வேலைகள் பாதிப்பட கூடாது என்ற நிலையில் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என்றும் உரிய மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறி உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories: