×

மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட  மணப்பாக்கம் 157வது வார்டு, முகலிவாக்கம் 156வது வார்டு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக, முக்கிய சாலைகள், கிளை காலைகள் என பல்வேறு இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால், குண்டும் குழியுமான சாலையில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

மேலும், தெருக்கள் புழுதிக்காடாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறியபடி செல்கின்றனர். அதுமட்டுமின்றி, பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணி முடிந்த இடங்களில், ஒப்பந்ததாரர்கள் சாலைகளை  செப்பனிடாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், குடிநீர் லாரி, ஆம்புலன்ஸ், பால்வண்டி போன்றவை அவ்வழியே செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பாதாள சாக்கடை திட்ட பணியில் ஒப்பந்ததாரர் குறைந்தளவு பணியாளர்களை வைத்து வேலை வாங்குவதால், விரைந்து முடிக்க முடியாத நிலை உள்ளது. பல நாட்களில் வேலைகள் நடப்பதே  இல்லை.

பல மாதங்களாக இந்த பணிகள் நடப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், சீரைமைக்கப்படாத சாலையால் வெயில் காலத்தில் புழுதி மண்டலமாகவும், மழை பெய்யும்போது சகதியாகவும் சாலைகள் மாறுவதால், வாகன ஓட்டிகள், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Manapakkam ,Mughalivakkam , Manapakkam and Mughalivakkam areas should be completed urgently: Public insistence
× RELATED உதவி செய்வது போல் நடித்து மூதாட்டியிடம் 9 சவரன் பறித்த 2 பேர் சிக்கினர்