மெரினாவில் இருந்து மகன் கடத்தப்பட்டதாக மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த பொய் புகாரால் பரபரப்பு: போலீசார் மீட்டு உறவினருடன் ஒப்படைத்தனர்

மாதவரம் : சென்னை அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் கடந்த 16ம் தேதி இரவு, சுதா என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த நான், எனது கணவருடன் ஏற்பட்ட தகராறில், அவரை பிரிந்து, எனது மகன் வசந்த்(8) உடன் சென்னைக்கு வந்தேன். மெரினா கடற்கரை மணலில் எனது மகனுடன் தூங்கி கொண்டிருந்தேன். அப்போது ஐஸ்வர்யா என்ற பெண் அறிமுகமானார். பிறகு சிறிது நேரத்தில் எனது மகனுடன் அந்த பெண் மாயமாகிவிட்டார். எனது மகனை மீட்டு தர வேண்டும், என்று தெரிவித்திருந்தார்.

அதன்பேரில், அண்ணாசதுக்கம் போலீசார் மெரினா கடற்கரையில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.

ஆனால், அவர் கூறிய தேதியில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று தெரியவந்தது. சிறுவன் மாயமான சம்பவம் குறித்து சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே புகார் அளித்த சுதா, எனது மகனிடம் செல்போன் உள்ளது. அதில் பேசினால் எனது மகனை எளிமையாக கண்டுபிடித்து விடலாம், என்று கூறியுள்ளார். உடனே போலீசார் அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அந்த செல்போன் கடைசியாக எங்கே சிக்னல் இருந்தது குறித்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்த போது, செல்போன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் சிக்னல் காட்டியது.

உடனே போலீசார் சம்பவம் குறித்து எஸ்பிளனேடு போலீசாரை தொடர்பு கொண்டு விசாரித்த போது, கடந்த 14ம் தேதி வசந்த் என்ற சிறுவனை பெண் ஒருவர் எஸ்பிளனேடு காவல் நிலையம் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்தனர். பிறகு சிறுவனுடன் வந்த பெண்ணுடன் நான் செல்ல மாட்டேன் என்று கூறி அழுதுள்ளான். இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள், சிறுவனுடன் வந்த பெண்ணிடம், நீ சிறுவனின் உண்மையான தாயா, இல்லை குழந்தையை கடத்தி வந்தாயா என்று கேட்டனர். அதற்கு அந்த பெண், நான் சிறுவனின் தாய் தான் என்றும், காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரை அழைத்து வருகிறேன் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

வெகு நேரம் ஆகியும் அந்த பெண் வராததால் பொதுமக்கள் சிறுவனை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தது தெரியவந்தது. பிறகு சிறுவனை போலீசார் தொண்டு நிறுவனம் மூலம் காப்பகத்தில் சேர்த்தது தெரியவந்தது. பின்னர் அண்ணசதுக்கம் போலீசார் சிறுவன் வசந்த் வைத்திருந்த செல்போன் எண்ணை வைத்து திருவிடைமருதூரில் உள்ள உறவினர்களிடம் விசாரணை நடத்திய போது, மகனை கடத்தியதாக புகார் அளித்த சுதா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், வசந்த் அவரது மகன் தான் என்றும் தெரியவந்தது. சுதாவின் கணவர் போதைக்கு அடிமையானதால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

இதனால் கடந்த வாரம் சுதா தனது மகனுடன் வீட்டை வீட்டு வெளியேறியதாகவும், அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியதும் உறுதியானது. அதைதொடர்ந்து அண்ணாசதுக்கம் போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட சுதா மற்றும் அவரது மகன் வசந்த் ஆகியோரை உறவினர்களை சென்னைக்கு வரவழைத்து தாய் மற்றும் மகனை அண்ணாசதுக்கம் போலீசார் ஒப்படைத்தனர். புகார் அளித்த உடன் விரைந்து நடவடிக்கை எடுத்து தாயுடன் மகனை சேர்த்து வைத்த போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: