×

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ராஜாவை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ராஜாவை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 12ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார். நீதிபதி துரைசாமி வரும் 21ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து தற்போது சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலக பணிகளை மேற்கொண்டு வரும் (பொறுப்பு தலைமை நீதிபதி) நீதிபதி எம்.துரைச்சாமி வரும் 21ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி டி.ராஜா தலைமை நீதிபதி அலுவலக பணிகளை கவனிப்பார் (பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார்) எனவும் நீதிபதி ராஜா வரும் 22ம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதிகளுக்கான பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி டி.ராஜா, மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் கடந்த 1961ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை தேனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும் உயர் கல்வியை மதுரை பசுமலை பள்ளியிலும், பின்னர் பி.யூ.சி படிப்பை வக்ஃப் வாரிய கல்லூரியிலும், பி.ஏ. மற்றும் ஏம்.ஏ. படிப்பை மதுரை கல்லூரியிலும் முடித்த நீதிபதி டி.ராஜா, சட்டபடிப்பை மதுரை அரசு சட்டக்கல்லூரி முடித்து கடந்த 1988ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். பின்னர் மூத்த வழக்கறிஞர் சி.செல்வராஜிடம் ஜூனியராக பணியை தொடங்கிய ராஜா பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி செய்தார்.

சிவில், கிரிமினல், அரசியல் சாசன வழக்குகள் நிபுணத்துவம் பெற்றுவர். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான ராஜா, கடந்த 2008ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றிய அவர் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி ராஜா அடுத்த ஆண்டு மே மாதம் 24ம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : President ,Senior Judge ,D. Raja ,Chief Justice ,Madras High Court , President's order appointing Senior Judge D. Raja as the Chief Justice of Madras High Court
× RELATED மோடி தமிழநாட்டிற்கு எத்தனை முறை...