ஆரோவில் மரோமா விற்பனை நிறுவனத்தில் பல கோடி மதிப்புள்ள 4 சிலைகள் மீட்பு: சிலை திருட்டு தடுப்பு பிரிவு நடவடிக்கை

சென்னை: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் உள்ள மரோமா விற்பனை நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்புள்ள தொன்மையான 4 சிலைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் நேற்று பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் அமைந்துள்ள மரோமா விற்பனை நிறுவனத்தில் பழமையான உலோக சிலைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் சிலைகளை பதுக்கி வைத்திருக்கும் மரோமா விற்பனை நிறுவனத்தில் சோதனை நடத்த கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற்றனர்.

அதன்படி ஆரோவில்லில் உள்ள மரோமா நிறுவனத்தில் நேற்று காலை சிலை திருட்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த நிறுவனத்தின் ரகசிய அறையில், 78 செ.மீட்டர் உயரம் உள்ள சிவகாமி அம்மன் உலோக சிலை, 45 செ.மீட்டர் உயரம் உள்ள ஆஞ்சநேயர் கற்சிலை, 30 செ.மீட்டர் உயரம் உள்ள நாக தேவதை கற்சிலை, 38 செ.மீட்டர் உயரம் உள்ள இடது கை உடைந்த நிலையில் சிவன் கற்சிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே பல கோடி மதிப்புள்ள அந்த 4 சிலைகளையும் சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். மேலும், அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: