பிரமோற்சவத்தில் அன்னதானம் தர நன்கொடை வசூலிப்பதை பக்தர்கள் நம்ப வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் வரும் 27ம் தேதி பிரமோற்சவம் நடைபெற உள்ளதையொட்டி, அன்னப்பிரசாதம் வழங்குவதாக கூறி நன்கொடை சேகரிக்கும் அறக்கட்டளையை நம்ப வேண்டாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெறும் பிரமோற்சவத்தில் பக்தர்களுக்கு இலவசமாக அன்னப்பிரசாதம் வழங்க உள்ளது. அன்னதானம் என்ற பெயரில் நன்கொடை கேட்கும் தனியார் அமைப்புகள், அறக்கட்டளைகள், தனிநபர்களுக்கு நன்கொடை அளிக்க வேண்டாம்.

செகந்திராபாத் அனந்த கோவிந்ததாச அறக்கட்டளை பக்தர்களிடம் நன்கொடை கேட்பதாக கவனத்திற்கு வந்துள்ளது. இதற்காக,அந்த அறக்கட்டளை மூலம் நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோல், வசூல் செய்யும் அமைப்புகளுக்கும் தேவஸ்தானத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனவே, இதுபோன்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் வார்த்தைகளை பக்தர்கள் நம்ப வேண்டாம். சட்ட விரோதமாக நன்கொடை வசூலிக்கும் அறக்கட்டளைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: