மது போதையில் வந்ததால் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட பஞ்சாப் முதல்வர்: எதிர்க்கட்சிகள் புகாரால் பரபரப்பு

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் குடிபோதையில் இருந்ததால் லுப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக  வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 11ம் தேதி ஜெர்மனிக்கு சென்றார். ஜெர்மனி பயணம் முடித்து பிராங்பர்ட்டில் இருந்து டெல்லிக்கு நேற்றுமுன்தினம் பகவந்த் மான் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் அவர் லுப்தான்சா விமானத்தில் வரவில்லை. இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாததால் அவர் திரும்புவது தாமதமானதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.

இந்த சூழலில் பகவந்த் மான் அளவுக்கதிகமான குடிபோதையில் இருந்ததால் அவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதாகவும், இதனால் விமானம் நான்கு மணி நேரம் தாமதமானதாகவும் சிரோன்மணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறி உள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘பகவந்த் மான் போதையில் இருந்ததால் விமானம் காலதாமதமாக சென்றது. இதன் தொடர்ச்சியாக ஆம் ஆத்மி தேசிய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் பகவந்த் தவற விட்டுள்ளார். இந்த செய்தி, உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

வரும் 22ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு

இதற்கிடையே, பஞ்சாப் சட்டமன்றத்தில் வரும் 22ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று முதல்வர் பகவந்த் சிங் மான் தெரிவித்தார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் 10  எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் பாஜ ஈடுபடுவதாக ஆளும் கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியது.   இந்தநிலையில்,பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், மாநில அரசை கவிழ்க்கும் நோக்கில் சிலர் எங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்க முயன்ற சம்பவம் பற்றி நீங்கள்  கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அரசு மீது எம்எல்ஏக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் வரும் 22ம்  தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: