விழுப்புரம் அருகே கத்திரி செடியில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கத்திரி செடி பயிரிட்ட வயல்களில் நோய் தாக்கத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விழுப்புரம் அருகே பிடாகம், அத்தியூர் திருவாதிகை, வேலியம்பாக்கம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள் கத்திரி மற்றும் வெண்டை, கடலை போன்றவைகளை பயிரிட்டு வருகின்றனர். இவை வறட்சியை தாங்கி நன்கு வளரக் கூடியதும், வருடம் முழுவதும் மகசூல் தருவதும் ஆகும். பருவநிலை மாற்றங்களால் புது புது நோய்கள் காய்கறி செடிகளை தாக்குகிறது. இதனால் விளைச்சலில் சரிவு ஏற்பட்டு மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போது பிடாகம் அருகே பயிரிடப்பட்டுள்ள கத்திரி செடியில் நோய் தாக்குதலால் விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், கத்திரி செடி பயிரிட தனியாக பட்டமெல்லாம் கிடையாது. கத்திரிக்காயை பொருத்த வரை புழு விழுந்துவிடாமல் பாதுகாப்பது அவசியம். அப்போதுதான் மார்க்கெட்டிற்கு கொண்டு போகும்போது நல்ல விலைக்கு விற்க முடியும். தற்போது கத்திரிக்காய் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வருகிறது. விழாக்காலங்களில் நல்ல கிராக்கி இருக்கிறது. நாங்கள் கத்திரி பயிரிடப்பட்டு விளைச்சலை எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் இலைகளில் உள்ள நோய் தாக்குதலால் விளைச்சல் குறைய வாய்ப்புள்ளது. இதனால் நஷ்டம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், என்றார்.

Related Stories: