×

ஊசூர்- சிவநாதபுரம் தார் சாலையில் சிறுபாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அணைக்கட்டு: ஊசூர்-சிவநாதபுரம் சாலையில் கால்வாயில் இருந்து வெளியேறி சாலையில் செல்லும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஊசூர்-சிவநாதபுரம் சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. அப்போது சாலைகளில் மழைநீர் வெளியேறும் வகையில் சிறுபாலங்கள் அல்லது ைபப்புகள் புதைக்கும்படி கிராமமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஒரு சில இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் சிறுபாலங்கள், பைப்புகள் அமைக்காமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தியூர் குருமலை அடிவாரத்தில் இருந்து கால்வாய்கள் மூலம் வரும் மழைநீர் தெள்ளூர்பாளையம், வீராரெட்டிபாளையத்தில் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. இதில் தெள்ளூர்பாளையம் ரேஷன்கடை அருகே சாலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஆறாக ஓடுகிறது.

மேலும் அருகே அத்தியூர் செல்லும் சாலையிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் மாணவர்கள் மிகுந்து சிரமத்திற்குள்ளாகின்றனர். இதில் வீராரெட்டிபாளையம் புதுத்தெருவில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் கொசு உற்பத்தி அதிகரித்து மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். புதிதாக போடப்பட்ட சாலைகளில் தண்ணீர் செல்வதால் தார்சாலையும் சேதமாகி வருகிறது.

எனவே ஊசூர்-சிவநாதபுரம் செல்லும் சாலையில் தெள்ளூர்பாளையம் மற்றும் அத்தியூர் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் சிறுபாலங்கள் அல்லது பைப்லைன்கள் அமைத்து தண்ணீர் கடந்து செல்ல நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Usur- Sivanathapuram , Public demand for construction of small bridge on Usur- Sivanathapuram tar road
× RELATED ஊசூர்- சிவநாதபுரம் தார் சாலையில் சிறுபாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை