×

வண்டலூரில் 24ம் தேதி விழா: மரக்கன்று நடும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்கிறார்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வரும் 24ம் தேதி பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில், மரக்கன்று நடும் திட்ட விழா நடக்கிறது.  இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். விழா நடக்கும் இடத்தை நேற்று மாலை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

விழா ஏற்பாடு குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் ஒவ்வொரு துறையும், முதலிடத்தை நோக்கி வளர்ச்சி பெற்று வருகிறது.  அந்த வகையில். வனத்துறை மூலம் 33 சதவீத காடுகளின் பரப்பளவை உயர்த்திட ஈர நிலத்திட்டம் சிறப்பாக செயல்படுவதுபோல் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.  

இன்னும் 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 32 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.  நடப்பாண்டு முதல் கட்டமாக 2.50 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. வரும் 24ம்தேதி வண்டலூரில் மரக்கன்று நடும் திட்ட விழாவை முதலமைச்சர் துவக்கி வைத்து மரக்கன்றுகள் நட்டு வைக்க உள்ளார்.

500 மரக்கன்றுகள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. விழா மூலம் தமிழ்நாட்டினை பசுமை மாநிலமாக மாற்றிட தொழில் முனைவோர், அரசு துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட அனைவரையும் பங்கேற்க செய்து, மக்கள் இயக்கமாக தொடங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.  கடந்த ஓராண்டாக வனத்துறை சிறப்பாக செயல்பட்டு 13 ராம்சார் காடுகள் கண்டறியப்பட்டு, சர்வதேச அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது” என்றார்.

ஆய்வின்போது, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குனரும் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலருமான சீனிவாஸ் ரா.ரெட்டி, பசுமை தமிழ்நாடு இயக்க இயக்குநர் தீபக் வஸ்தவா, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா துணை இயக்குநர் ஆர்.காஞ்சனா, கொளப்பாக்கம், மாநில வன ஆராய்ச்சி நிலைய துணை வனப்பாதுகாவலர் எஸ்.சண்முகம், கொளப்பாக்கம், மாநில வன ஆராய்ச்சி நிலைய வனச்சரக அலுவலர் ஆர்.ரகு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Vandalur ,Marakkam , Ceremony on 24th in Vandalur: Chief Minister inaugurates tree sapling programme
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம்,...