மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.வின் உயிலை வெளியிடக்கோரி அவரது நினைவிடத்தில் உண்ணாவிரதம்: ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வலியுறுத்தி, அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்கோரி சென்னை மாங்காட்டைச் சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தன்னை அழைத்து திருவேற்காடு, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலங்களில் வீடுகள் ஏற்படுத்தும்படி கூறியதாகவும், அதன் அடிப்படையில் வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுத்து, 125 வீடுகளுக்கு முன் பணமாக ரூ.30 லட்சம் வசூலித்து கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் இந்த விவரங்கள் சசிகலாவுக்கும், ஜெயலலிதாவின் உதவியாளரான ரமேஷ் என்பவருக்கும் தெரியும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், பெங்களூரு சென்ற வழியில் தன்னை சந்தித்த சசிகலா, சில சொத்துக்களை தனது பெயருக்கு ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாகக் கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா தற்போது தன்னை சந்திக்க மறுப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஜெயலலிதாவின் உயிலை வெளியிட பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஜெயலலிதாவின் சமாதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறைக்கு மனு அளித்ததாகவும், அந்த மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், விசாரணையை வரும் அக்டோபர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Related Stories: