×

மழை குறைவால் அறுவடை தீவிரம் தினமும் 4 லட்சம் இளநீர் வெளியூர் அனுப்பி வைப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியில் மழை குறைவால் இளநீர் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று தினமும் 4 லட்சம் இளநீர் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடியே அதிகளவு உள்ளது. இதில், சுற்று வட்டார பகுதிகளில் உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு வெளி மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆண்டுதோறும் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி மழைக்காலங்களிலும் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியிலிருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் வரை தினமும் சுமார் 2.50 லட்சம் வரையிலான இளநீர், வெளி வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் இறுதி முதல் மே மாதம் 3வது வாரம் வரையிலும் கோடை மழை பெய்தது. அதன்பின், ஜூன் இறுதி முதல் தென்மேற்கு பருவமழை  ஆரம்பத்தால் சுமார் ஒன்றரை மாதம் இளநீர் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. மழையால் தென்னையில் உற்பத்தியாகும் இளநீரின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமானது. இப்போதைய சூழ்நிலையில் தேங்காய் விலை சரிவால் பெரும்பாலான விவசாயிகள், இளநீராக அறுவடை செய்து விற்னைக்கு அனுப்பி வைப்பதை அதிகரித்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு இளநீர் பண்ணை விலை அதிகபட்சமாக ரூ.32 வரை இருந்தது.

ஆனால், இளநீர் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்ததால், சற்று குறைய துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு இளநீர் பண்ணை விலையாக ரூ.27ஆக சரிந்தது. தற்போது, மழை குறைவால் இளநீர் அறுவடை மேலும் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்களில் அனுப்பப்படும் இளநீரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

பொள்ளாச்சி இளநீருக்கு கிராக்கியால் நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் வரையிலான இளநீர் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால், பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் பொள்ளாச்சிக்கு நேரடியாக வந்து தோட்டங்களில் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து இளநீர் கொள்முதல் செய்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா, மகாராஷ்டிரா, அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் இளநீர் அனுப்பும் பணி அதிகரித்துள்ளது. பண்ணை விலை குறைந்தாலும், உற்பத்தி அதிகரித்து விற்பனை விறுவிறுப்பால் விவசாயிகள் மட்டுமின்றி, வியாபாரிகளுக்கு ஓரளவு லாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இளநீர் உற்பத்தியார் சங்க தலைவர் சீனிவாசன் கூறுகையில்,‘பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் உற்பத்தியாகும் குட்டை, நெட்டை, வீரிய ஒட்டு இளநீரின் விலை தற்போது பண்ணை விலையாக ரூ.27 எனவும், ஒரு டன் இளநீரின் விலை ரூ.9500 எனவும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தமிழகத்தில் சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மழை இல்லாததால் இளநீர் அறுவடை அதிகரித்ததுடன் அதன் தேவையும் அதிகமாகியுள்ளது.

 சண்டிகார், ராஜஸ்தான், ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, உடுமலை பகுதியில், இளநீர் அறுவடை அதிகரித்து, அதன் விலை சரிந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவில், நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சத்துக்கு மேல், இளநீர் வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது.
வரும் நாட்களில் இளநீரின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும்போது, நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வரையிலான இளநீர் அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.

Tags : Pollachi: Due to the lack of rain in Pollachi area, harvesting of fresh water is going on intensively and 4 lakh fresh water is being sold to the outlying areas every day.
× RELATED மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து மூதாட்டி பலி