புரட்டாசி மாதம் தொடங்கியதால் வேலூர் மீன்மார்க்கெட் வெறிச்சோடியது-விலை குறைந்தும் விற்பனை சரிந்தது

வேலூர் : புரட்டாசி மாதம் என்றாலே விரதத்துக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலானோர் பெருமாளுக்கு விரதம் இருந்து இறைவனை வழிபடுவார்கள். அசைவ பிரியர்களும் புரட்டாசி மாதத்தில் மீன்-இறைச்சி சாப்பிடாமல் தவிர்ப்பார்கள். இதனால் புரட்டாசி மாதத்தில் மீன்-இறைச்சி வியாபாரம் மந்தமாகவே இருக்கும். இந்த வருடம் புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. புரட்டாசி மாதத்தையொட்டி இறைச்சி, மீன்கள் விற்பனை கடைகள் வெறிசோடியது.

இந்நிலையில் வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 80 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 100 முதல் 150 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது. புரட்டாசி மாதம் பிறந்ததால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன் விற்பனை வெறிசோடியது. இதேபோல் கோழி, ஆட்டுக்கறி கடைகளிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் விற்பனை வெகுவாக சரிந்தது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘புரட்டாசி மாதத்தையொட்டி வேலூர் மீன் மார்க்கெட்களில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

எப்போதும் மீன் மார்க்கெட்டில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆனால் குறைவான மக்களே மீன்கள் வாங்க வருகிறார்கள். இதனால் மீன்கள் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்கள் மற்றும் இறைச்சிகள் கடந்த வாரத்தை விட சற்று விலைகள் குறைந்துள்ளது. இருப்பினும் வாங்க தான் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்த மாதம் முழுவதும் விற்பனை குறைவாக தான் இருக்கும்’ என்றனர்.

Related Stories: