அகரம்குளம் கண்மாய் வாய்க்காலில் கறுப்பு நிறத்தில் மாறிய தண்ணீர்-துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு

நிலக்கோட்டை : கொடைரோடு அருகே பள்ளபட்டி அகரம் கண்மாய் வாய்க்காலில் தண்ணீர் கருமை நிறத்தில் மாறி ஆயில் கலந்த எண்ணெய் படலமாக துர்நாற்றம் வீசுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே பள்ளப்பட்டியில் 100-ஏக்கர் பரப்பளவு கொண்ட அகரங்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் கடந்த வாரம் பெய்த மழையில், 20-ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் சென்றதால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், சிறுமலை அடிவாரம் மாவூர் அணையிலிருந்து பள்ளபட்டி அகரம்குளம் கண்மாய்க்கு வரும் வாய்காலில் பள்ளபட்டி சிப்காட் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் இரவு நேரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளால் குளம் முழுவதும் கருமை நிறத்தில் மாறி கடுமையான துர்நாற்றம் வீசிவருகிறது.

மேலும், அந்த குளப்பாசன பகுதிகளான சுமார் 950 ஏக்கர் விவசாய நிலங்களில் பரவிய தண்ணீர் நிலம் முழுவதும் எண்ணெய் படலமாக பரவியதுடன், துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே இந்த குளத்து தண்ணீரை ஆய்வு செய்து கழிவுகளை கொட்டிய தனியார் தொழிற்சாலை மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: