×

விபத்துகளை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை ஏலகிரி மலையில் போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு

ஏலகிரி :  ஏலகிரி மலையில் மலைப்பாதைகளில் விபத்துகளை தடுக்க தலைக்கவசம், சீட் பெல்ட், அணியாதவர்களுக்கு ஏலகிரி மலை போலீசார் அபராதம் விதித்தனர்.
 திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டில் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவதால் இங்கு பல மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெவ்வேறு பகுதிகளில் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வருகின்றனர்.

ஏலகிரி மலை உயரம் 1410.60 மீ உயரத்தில் பசுமை நிறைந்த வண்ணத்தில் இம்மலைப் பகுதி அமைந்துள்ளது.  ஏலகிரி மலைபாதை ஏறும் போது 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
ஏலகிரி மலையில் முக்கிய சுற்றுலா தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, அரசு மூலிகைப்பண்ணை, பழப்பண்ணை, சுவாமிமலை- மலையேற்றம்,
முருகன் கோயில், தொலைநோக்கி இல்லம், கதவ நாச்சியம்மன் கோயில், மங்கலம் தாமரைக்குளம் , ஆகியவை ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்கு பார்வை இல்லமாக அமைந்துள்ளது.
நேற்று, நேற்றைய முன் தினம், விடுமுறை நாள் என்பதால் ஏலகிரி மலைக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

 சுற்றுலாத்தலத்தினை காண வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தில் வரும் போது , தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாமல் வருவதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில்  ஐந்து பேர் சென்ற  போது கட்டுப்பாட்டை இழந்து பாறையின் மீது மோதி   விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
எனவே இதுபோன்ற விபத்துக்களை தடுக்க ஏலகிரி மலை காவல்துறையினர் எஸ்.ஐ.கோதண்டன் தலைமையில் எஸ்.எஸ். ஐ.சத்தியமூர்த்தி,  தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சோதனையின் மூலம் தலைக்கவசம், சீட் பெல்ட், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர், நான்கு பேர் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்றவை சம்பவங்கள் தடுக்கப்படுகின்றன. மேலும் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சீட் பெல்ட், தலைக்கவசம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, போன்றவைகளை சோதனை செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி அபராதம் விதித்தனர்.

Tags : Elagiri Hill , Elagiri: The Elagiri hill police fined those who did not wear helmets, seat belts, to prevent accidents on mountain roads.
× RELATED பெங்களூரு தொழிலதிபரின் அட்ராசிட்டி 10...