×

வார விடுமுறையையொட்டி கும்பக்கரை அருவியில் உற்சாக குளியல் -குவியும் சுற்றுலாப் பயணிகள்

பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மாத இறுதியில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கடந்த 31ம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் அறிவித்தனர். கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சீரானது.இதையடுத்து, கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

அதிலும் வார விடுமுறையான நேற்று சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தேனி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும், அருவியில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, முதலுதவி உபகரணங்கள் மற்றும் செவிலியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kumbakkarai Falls , Periyakulam: Tourists are excited during the weekend as bathing in Kumbakarai Falls has been allowed.
× RELATED கும்பக்கரை அருவியில் 2வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை