×

தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 உழவர் சந்தைகளில் தினமும் 55 டன் காய்கறி, பழங்கள் விற்பனை-கலெக்டர் தகவல்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளிலும் தினமும் 55 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.
வேளாண்மை - உழவர் நலத்துறையின் அங்கமான வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் மூலமாக நாஞ்சிக்கோட்டை சாலையில் இயங்கி வரும் தஞ்சாவூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண்மை பொருட்கள் மற்றும் பாரம்பரிய தின்பண்டங்கள் அங்காடியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியது:

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் மற்றும் திருக்காட்டுபள்ளி ஆகிய ஐந்து வட்டாரங்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளிலும் சேர்த்து நாளொன்றிற்கு சராசரியாக ரூ.21 லட்சம் மதிப்பு உள்ள 55 டன் வரத்து கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் 175 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தினசரி 8,000 முதல் 9,000 நுகர்வோர்கள் பயனடைகின்றனர்.
தஞ்சாவூர் உழவர் சந்தையில் உள்ள 71 கடைகளின் மூலம் நாளொன்றிற்கு சராசரியாக ரூ.6 லட்சம் மதிப்பு உள்ள 15 டன் வரத்து கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் 65 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தினசரி 1500 நுகர்வோர்கள் பயனடைகின்றனர்.

தஞ்சாவூர் உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சார்பான தஞ்சாவூர் உழவர் சந்தையில் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், தானியங்கள், எண்ணெய் வகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மாலை நேரங்களில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை அடிப்படையில் விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் பாரம்பரிய கைக்குத்தல் அரிசி வகைகள் கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார் போன்ற அரிசி வகைகள், அவல், செக்கு எண்ணெய், நாட்டு கருப்பட்டி, பருப்புமுறுக்கு, கடலை, சர்க்கரை, வகைகள்,எள்ளுருண்டை போன்ற பாரம்பரிய உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. இயற்கை வேளாண்மை பொருட்கள் விளைவிக்கும் விவசாயிகளுக்கும், பாரம்பரிய
திண்பண்டங்கள் தயார் செய்பவர்களுக்கும் வியாபாரம் செய்வதற்கு இது நல்ல வாய்ப்பாகும்.

உழவர்சந்தையில், இயற்கை வேளாண்மை பொருட்கள் மற்றும்பாரம்பரிய உணவு பொருட்களை வாங்கி பயனடையுமாறு நுகர்வோர்களை மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
தோட்டக்கலைத் துறையின் டான்ஹோடா விற்பனை நிலையத்தின் 2 கடைகளில் குன்னூர் ஜாம், மா ஊறுகாய் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து தேன், பட்டை, பிரியாணி இலைகள் மற்றும் மாடித் தோட்ட பைகள், செடி வளர்ப்பதற்கான தொங்கும் தொட்டிகள், மண்புழு உரங்கள், காய்கறி விதைகள் மற்றும் கைதெளிப்பான்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விழாவில் தஞ்சை மாவட்ட எஸ்பி ரவளி பிரியா, வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குனர் மரியரவி ஜெயக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டங்கள் (பொ) சாருமதி, மற்றும் இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் ஜெய்ஜிபால் ஜெபசிங் மற்றும் உழவர் சந்தை அலுவலர்கள் மேற்கொண்டனர்.

Tags : Thanjavur , Thanjavur: Collector Dinesh said that 55 tons of vegetables and fruits are sold daily in the 5 farmers markets in Thanjavur district.
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...