×

உ.பி. சட்டசபை நோக்கி சமாஜ்வாதி பிரம்மாண்ட பேரணி: அகிலேஷ் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

உத்தரப்பிரதேசம் : உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டு விட்டதாக கூறிய மாநில சட்ட பேரவை நோக்கி சமாஜ்வாதி கட்சி பிரமாண்ட பேரணியை மேற்கொண்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில சட்ட பேரவை மழைக்கால தொடர் இன்று தொடங்குகிறது. பேரவை தொடங்கும் முதல் நாள் அன்றே யோகி ஆதித்தியநாத் தலைமையில் பா.ஜா.க அரசுக்கு எதிராக சட்டப் பேரவை நோக்கி பேரணி நடைபெறும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.

அதன்படி சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் இருந்து இந்த பிரமாண்ட பேரணி தொடங்கியது. அகிலேஷ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏகள், சட்ட மேலவை உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்றுள்ளனர். யோகி ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று பேரணியில் பங்கேற்று உள்ளோர் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை முன்வைத்தும் அவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

யோகி ஆதித்தியநாத் ஆட்சியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், சமாஜ்வாதி கட்சி சாமானிய மக்களின் பிரச்சனைக்காக பேரணியை நடத்தவில்லை என்றும், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே போராட்டத்தை நடத்துவதாகவும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளார். எந்த பிரச்சனைகள் குறித்தும் சட்ட பேரவையில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போதைய சூழலில் இந்தியாவில் எதிர் கட்சிகளை பழிவாங்கும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சி செயல்படுவது சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து என்றும் பாரதிய ஜனதா கட்சி வெறுப்பு அரசியலை செய்வதாகவும் சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சட்ட சபை நோக்கிய பேரணி அனுமதியின்றி நடத்தப்படுவதால் அது தடுத்து நிறுத்தப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனுமதி பெற்று ஒதுக்கப்படும் பாதையில் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் பேரணி நடத்தினால் தங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அவர்கள் கூறி இருக்கின்றனர். சமாஜ்வாதி கட்சி அலுவலகம் தொடங்கி சட்டப்பேரவை வரை வழி நெடுகிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.         


Tags : UP Samajwadi ,Akhilesh , UP, Samajwadi rally, led by Akhilesh, participated by thousands
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை