×

மங்கலம்பேட்டை பேருந்து நிலையம் அருகே சாலையில் திறந்து கிடக்கும் ஆபத்தான பள்ளம்-மூட பொதுமக்கள் கோரிக்கை

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விருத்தாசலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் நெடுஞ்சாலையில் இப்பகுதி அமைந்துள்ளதால் மங்கலம்பேட்டை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் அன்றாட தேவைகளுக்காக மங்கலம்பேட்டைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மங்கலம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 50 மீட்டர் தொலைவில் சாலையின் அருகே கழிவுநீர் கால்வாய் பள்ளம் ஆபத்தான முறையில் திறந்து கிடப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.மேலும் இப்பகுதியில் கோயில்கள், மசூதிகள், காய்கறி மார்க்கெட், வங்கிகள், பள்ளிகள் உள்ளதால் பொதுமக்கள் நடமாடும் முக்கிய பகுதியாக உள்ளது.

நெடுஞ்சாலை என்பதால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதுடன், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இங்கு நடந்து செல்கின்றனர். ஆனால் இந்த பள்ளத்தை பல ஆண்டுகளாக நெடுஞ்சாலை துறை நிர்வாகம் அல்லது பொதுப்பணி துறை நிர்வாகம் மூடுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்து வருவதால் தினமும் அச்சத்தில் நடந்து சென்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்த நிலையில் இதனால் இந்த பள்ளத்தை மூட வேண்டும் என்று பல தரப்பு மக்களும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதுவரை எந்த நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. மேலும் இந்த பள்ளம் திறந்து கிடப்பதால் பழைய நெசவாளர் தெரு, காய்கறி மார்க்கெட், திரவுபதியம்மன் கோயில் வீதி, வாணியர் வீதி, வைசியர் வீதி, தேரடி வீதி, அய்யனார் கோயில் வீதி உள்ளிட்ட பகுதி மக்கள் வெளியேற்றும் கழிவுநீர் அனைத்தும் இந்த பள்ளத்தில் இறங்கி செல்வதால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் இந்த பள்ளத்தை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பல சமயங்களில் இந்த பள்ளத்தை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அங்கு வரும் அதிகாரிகள் நாங்கள் சரி செய்து விடுகிறோம் எனக் கூறிவிட்டு செல்கின்றனர். இந்த இடத்தில் கல்வெட்டு வாய்க்கால் ஒன்று அமைந்துள்ளது.

ஆனால் அந்த கல்வெட்டு வாய்க்காலின் மேலே இருபுறமும் பக்கவாட்டு சுவர் அமைக்கப்படாமல் இருப்பதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலையிலும் கொசு அதிகம் உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ள மக்களை கடித்து பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் நிலையிலும் துர்நாற்றம் வீசி அப்பகுதியில் வாழும் மக்கள் உணவு உண்ண முடியாத நிலையிலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடனடியாக இந்த கழிவுநீர் கால்வாய் வாய்க்காலில் பக்கவாட்டில் சுவர் அமைக்க வேண்டும், கால்வாயை மூடி பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Mangalampet , Vridthachalam: More than 15 thousand people are living in Mangalampet municipality next to Vridthachalam.
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்