சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

சிதம்பரம் :  சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் கரையோர கிராமங்களில் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும் நேரங்களில் முதலைகள் ஊருக்குள் புகுந்து அப்பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் மனிதர்களை கடித்து கொன்று விடுகின்றன.

மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கும்போதும், ஆற்று வழியாக சிதம்பரம் மற்றும் அதன் அருகே உள்ள செட்டிமேடு, நாஞ்சலூர், பழைய கொள்ளிடம், பெராம்பட்டு, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், வேலக்குடி, வல்லம்படுகை, அகரநல்லூர், கடவாச்சேரி உள்ளிட்ட கிராமங்களில், நீர் நிலைகளில் முதலைகள் தங்கி விடுகின்றன. அந்த பகுதியில் நீர் நிலைகளில் தங்கியிருக்கும் முதலைகள் ஆற்றில் இறங்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை கடித்து இழுத்து சென்று கொன்று விடுகின்றன.

இதுவரை முதலைகள் கடித்து பல பேர் இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். ஆடு, மாடுகளும் அதிக அளவில் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பிடிபடும் முதலைகள் வக்காரமாரியில் உள்ள நீர் ஏற்றும் நிலைய குளத்தில் விடப்படுகின்றன.

மழைக்காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும் போதும், வெள்ள பாதிப்பு ஏற்படும்போதும், அங்குள்ள முதலைகள் வெளியேறி மீண்டும் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இது தொடர்கதையாக இருந்து வருகிறது. வெள்ளம் மற்றும் வறட்சி காலங்களில் முதலைகள் வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் கால்நடைகள் மற்றும் மனிதர்களை கடித்து விடுகிறது. வக்காரமாரி நீர் ஏற்றும் நிலையம் அருகே உள்ள கிராம மக்கள், கொள்ளிடக்கரையோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் முதலை அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை பாதுகாக்க அப்பகுதியில் முதலை பண்ணை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: