×

ஆரணி அருகே பரபரப்பு பல்லி விழுந்த தண்ணீர் குடித்த 10 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்-மருத்துவமனையில் அனுமதி

ஆரணி : ஆரணி அருகே பல்லி விழுந்த தண்ணீரை குடித்து 10 சிறுவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், பூசிமலைக்குப்பம் ஊராட்சியில் முனீஸ்வரன் கோயில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் அருந்ததிபாளையம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் சிலர் நேற்று முன்தினம் விளையாடி கொண்டிருந்தனர்.

பின்னர், சோர்வடைந்த சிறுவர்கள், அதே பகுதியில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் டேங்கில் இருந்த தண்ணீரை குடித்தனர். அப்போது, குடிநீர் குழாய் வழியாக இறந்த பல்லி ஒன்று வந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் உடனடியாக வீட்டிற்கு சென்று, பல்லி இறந்த தண்ணீர் குடித்த தகவலை பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில், பல்லி விழுந்த தண்ணீரை குடித்த ஆஷிகா(14), தர்ஷன்(10), சுபாஷினி(13), பூவரசன்(9), கோபிகா(12), தர்ஷன்(8), கோபாலகிருஷ்ணன்(13), ரத்தீஷ்(7), காயத்ரி(11), கனிஷ்கா(5) ஆகிய 10 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக தங்களது பிள்ளைகளை முள்ளண்டிரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததும் 10 சிறுவர்களும் மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தகவலறிந்த ஆரணி ஆர்டிஓ தனலட்சுமி, தாசில்தார் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று சிறுவர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர், டாக்டர்களிடம் சிறுவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பழம் மற்றும் பிஸ்கட் வழங்கினர்.
பல்லி விழுந்த தண்ணீரை குடித்த சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பாரில் பல்லி: 4 பேருக்கு சிகிச்சை

ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன்(32), கூலி தொழிலாளி. இவரது மனைவி சுவாதி(28). இவர்களது மகள் கயல்விழி(2). இந்நிலையில், வெற்றிச்செல்வன் ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள  தனது தங்கையை பார்ப்பதற்காக  நேற்று முன்தினம் குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இரவு அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, சாம்பாரில் பல்லி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் வெற்றிச்செல்வன், அவரது மனைவி, மகள் மற்றும் தங்கைக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



Tags : Aurani , Arani: 10 boys suddenly vomited and fainted after drinking water from which a lizard fell near Arani. Thus hospital treatment
× RELATED மேற்கு ஆரணி வட்டாரத்தில் நவரை...