×

திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை: துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

சென்னை: திமுகவின் மாவட்ட அமைப்பு தேர்தல் தொடர்பாக கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக வரும் 22,23,24,25 ஆகிய தேதிகளில் வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 76 அமைப்பு மாவட்டங்களாக இருந்த திமுகவில் தற்போது நிர்வாக வசதிக்காக 72 மாவட்டங்களாக பிரித்து மறு சீரமைக்கப்பட்டிருக்கிறது. இந்த 72 மாவட்டங்களில் அவை தலைவர், மாவட்ட செயலாளர், 3 துணை செயலாளர்கள், பொருளாளர் மற்றும் தலைமை கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய எண்ணிக்கை அடிப்படையிலான தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

22ம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும், 23ம் தேதி மேற்கு மாவட்டங்களான நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கும், 24ம் தேதி புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், 25ம் தேதி வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் வேட்புமனு தாக்கல் நடைபெறவிருக்கின்றன.

இந்த வேட்புமனு தாக்கல், அதன் தொடர்ச்சியாக நடைபெறவிருக்கக்கூடிய தேர்தல் ஆகியவை தொடர்பாக இன்றைய தினம் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : DMK ,President ,Chief Minister ,M.K.Stal ,DMK District Organization ,Duraimurugan ,DR. ,Balu , DMK District Organization Election, M.K.Stalin, Consultation
× RELATED அண்ணல் நபிகளின் வழியில் வாழ்ந்து...