புரட்டாசி மாத விரதம் எதிரொலி சிக்கன், மட்டன் விற்பனை மந்தம்: ஞாயிறு அன்றும் பிரியாணி கடைகள் வெறிச்சோடியது

சென்னை: புரட்டாசி மாத விரதம் தொடங்கியதை அடுத்து சிக்கன், மட்டன் விற்பனை நேற்று மந்தமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமையிலும் பிரியாணி கடைகள் வெறிச்சோடி இருந்ததை காணமுடிந்தது. பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள், இந்த மாதத்தில் விரதம் இருப்பர். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். இந்த நிலையில் புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. அது மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை வேறு.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அனைவரும் வீட்டில் இருப்பது வழக்கம். இந்த நேரத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர்களுக்கு பிடித்த அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், சிக்கன், மட்டன் விற்பனை அதிகமாக இருக்கும். புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி நேற்று சிக்கன், மட்டன் கடைகளில் விற்பனை வழக்கத்தை விட குறைவாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் பிடித்துவரும் மீன்களை வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதல் வருவது வழக்கம். காசிமேட்டில் பிடித்து வரும் மீன்கள் சுவையாக இருப்பதே இதற்கு காரணமாகும். இந்நிலையில் நேற்று புரட்டாசி மாதம் தொடங்கியதும் மீன்களின் விலையில் ஏந்த மாற்றமும் இல்லை. வஞ்சரம் மீன் ஒரு கிலோ ரூ.900 முதல் ரூ.950 வரையும், கருப்பு வவ்வால் ரூ.500 முதல் 550 வரையும், பாறை ரூ.450 முதல் ரூ.500 வரையும், சங்கரா ரூ.280 முதல் ரூ.300 வரையும், சீலா மீன் ரூ.400 முதல் ரூ.450 வரையும், கொடுவா ரூ.410 முதல் ரூ.460 வரையும், இறால் ரூ.380 முதல் ரூ.400 வரையும், நண்டு ரூ.200 முதல் ரூ.250 வரையும் விற்பனை செய்யப்பட்டது. இன்னும் சில தினங்களில் மீன் விலை மேலும் குறையும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று குறைவாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் அசைவ ஓட்டல்களில் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். குறிப்பாக பிரியாணி கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். சில கடைகளில் மக்கள் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மட்டன், சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 உள்ளிட்டவைகளை வாங்கி செல்வது வழக்கம். ஆனால், நேற்று சென்னையில் பிரியாணி கடைகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. புரட்டாசி மாதம் பிறந்ததால் விற்பனை மிகவும் மந்தமாக இருந்ததாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: