தமிழக கோயிலில் திருடி சென்று அமெரிக்கா மியூசியத்தில் உள்ள 60 சிலையை மீட்க நடவடிக்கை: டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் சிறப்பு குழு

சென்னை: தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 60க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழக கோயில்களில் இருந்து பல கோடி மதிப்புள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மற்றும் தீனதயாளன் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது.

அந்த சிலைகள், சுபாஷ் கபூர் அமெரிக்காவில் உள்ள தனது மனைவி நடத்தும் சிலைகள் விற்பனை நிலையம் மூலம் பல கோடிக்கு ஏலம் லாபம் பார்த்து வந்துள்ளார். பின்னர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்து கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகளின் புகைப்படங்களை வைத்து வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தில் ஏலத்திற்கு விட காட்சிப்படுத்தப்பட்ட சிலைகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

அதில் பழமையான 60 சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தில் ஏலம் விட தயாராக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிலைகளை மீட்க யுனஸ்கோ ஒப்பந்தப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 13ம் தேதி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடந்த உயர் நிலை கூட்டத்தில், வெளிநாடுகளில் உள்ள சிலைகளை பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி நிறுவனத்தின் புகைப்பட ஆதாரங்களுடன் மீட்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு குழு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாக சென்று சிலைக்கான அனைத்து ஆதாரங்களை யுனஸ்கோ ஒப்பந்தப்படி இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உதவியுடன் முதல்கட்டமாக 60 சிலைகளை மீட்டு மீண்டும் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க காவல்துறை உயர் நிலை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையிலான தனிப்படை ஒன்று விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: