×

ராகுலை காங். தலைவராக்க 3 மாநில கமிட்டிகள் தீர்மானம்

புதுடெல்லி: ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க கோரி ராஜஸ்தான், சட்டீஸ்கர், குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் நிராகரித்தார். இதை தொடர்ந்து, சோனியா காந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைமையை விமர்சித்த அந்த கட்சியின் பல மூத்த அதிருப்தி தலைவர்கள் விலகினார்கள். கட்சியை வலுப்படுத்துவதற்காக ராகுல் காந்தி தற்போது இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடத்தப்படுகிறது. இதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி போட்டியிடவில்லை என்றால், சசிதரூர் உள்ளிட்ட பல தலைவர்கள் போட்டியிட தயாராகி வருகின்றனர். இதனால், கட்சியில் பரபரப்பு நிலவுகிறது. அதேநேரம், தோல்விகளால் துவண்டுள்ள கட்சிக்கு உத்வேகம் அளிக்க, ராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று சிதம்பரம் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க கோரி ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த மாநில காங்கிரஸ் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை முதல்வர் அசோக் கெலாட் முன்மொழிந்தார். இதை அனைவரும் ஏற்று கொண்டனர். இதனால், ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் டெல்லியில் இருந்ததால்  கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதன்மூலம், ராகுலை தலைவராக்கும் தீர்மானத்தை முதன் முதலில் கொண்டு வந்த மாநிலம் என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றுள்ளது.   சட்டீஸ்கர், குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் நேற்று இதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளன. இவற்றை பின்பற்றி மேலும் பல மாநில காங்கிரஸ் கமிட்டிகள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்தொற்றுமை தேவை
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் கருத்தொற்றுமை அடிப்படையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ராகுல் காந்தி  கட்சி தலைவராக இருக்கிறாரோ, இல்லையோ? அவர் என்றும் கட்சி தொண்டர்களின் மனதில் முக்கிய இடத்தில் இருப்பார். கட்சி தலைவர் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்பதில் எந்தவித சர்ச்சையும் ஏற்படவில்லை,’’ என்றார்.

Tags : Rakulai Kong , Resolution of Rahul Gandhi, Congress Committee, State Committees
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...