×

அத்தனையும் உள்நாட்டு தொழில்நுட்பம் சீனா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க புதிய ஹெலிகாப்டர்: அடுத்த மாதம் 3ல் விமானப்படையில் சேர்ப்பு

புதுடெல்லி: முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டரை அடுத்த மாதம் 3ம் தேதி விமானப்படையில் இந்தியா சேர்க்கிறது. பாகிஸ்தான், சீனாவால் எல்லைகளில் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இவற்றுக்கு பதிலடி கொடுப்பதற்காக ராணுவத்தை முழுவீச்சில் ஒன்றிய அரசு பலப்படுத்தி வருகிறது. குறிப்பாக, வெளிநாட்டு இறக்குமதிகளை குறைத்து, ‘ஆத்மநிர்பார்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் போர் விமானங்கள், ஏவுகணைகள், நவீன துப்பாக்கிகள் போன்றவற்றை தயாரித்து படைகளில் சேர்த்து வருகிறது.

இந்நிலையில், சீனா, பாகிஸ்தானுடன் போர் வந்தால் சியாச்சின், லடாக்  உள்ளிட்ட உயரமான மலை பகுதிகளில் போர் புரிய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்கு அதிக எடையில்லாத இலகு ரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகின்றன. இதற்காக, ஏற்கனவே தேஜஸ் என்ற பெயரில் இலகு ரக போர் விமானத்தை தயாரித்துள்ள  இந்தியா, தற்போது இலக ரக போர் ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது.  

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால், முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இது, அடுத்த மாதம் 3ம் தேதி விமானப்படையில் சேர்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளது. இந்த ஹெலிகாப்டரில் மிகவும் அதிநவீன ஏவுகணைகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளன.


Tags : China ,Pakistan ,Air Force , All indigenous technology China, new helicopter to counter Pakistan: 3 to be added to Air Force next month
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்