டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ரகளை: பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு கடந்த 16ம் தேதி மாலை, சுமார் 10 பேர் கொண்ட கும்பர் வந்து, கடையை நடத்தக்கூடாது, உடனடியாக பாரை மூடுங்கள், என்று தகராறில் ஈடுபட்டனர். பின்னர், அங்கிருந்தவர்களை மிரட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் கடை மாவட்ட மேலாளர் செந்தில்குமார் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், இதுகுறித்து விசாரித்தனர். அதில், இந்த பாருக்கான ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி அன்று முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, புதிய பார் நியமனம் செய்யப்பட்டுள்ளது. முறையான அனுமதியுடன் செயல்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே இந்த பாரை எடுத்து நடத்தியவர்கள் சிலர் குறிப்பிட்ட அந்த கடைக்கு வந்து பாரை நடத்தக் கூடாது என்று மிரட்டி சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக, கோயம்பேடு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த அன்புச்செல்வன் (45) என்பவரை நேற்று கைது செய்தனர். இவர், பார் உரிமையாளர் சங்க தலைவராக இருப்பது தெரிந்தது. இவரது தூண்டுதலின் பேரில் டாஸ்மாக் கடையில் தகராறு செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அன்புச்செல்வன் மீது அரசு பணியினை செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த  போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: